அருங்காட்சியகப் பொருட்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பி வழங்க ஹாலந்தில் பெருகிய ஆதரவு!

த ஹேக்: ஹாலந்து நாட்டின் புகழ்பெற்ற அருங்காட்சியகங்களில் உள்ள பிற நாடுகளுக்குச் சொந்தமான உடைமைகளை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி வழங்கிவிடுவது என்ற கருத்திற்கு அந்நாட்டில் ஆதரவு அதிகரித்துள்ளது.

அந்நாட்டின் அருங்காட்சியகங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கும் ரிஜ்க்ஸ்மியூசியம் மற்றும் ட்ரோபன்மியூசியம் ஆகியவற்றில் இக்கருத்து ஆதரவு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காலனியாதிக்க யுகத்தில், பல்வேறு நாடுகளிலிருந்து நெதர்லாந்திற்கு கொண்டுவரப்பட்ட பொருட்களை, சம்பந்தப்பட்ட நாட்டிற்கே திருப்பியனுப்புவது தொடர்பானதுதான் இந்த விவாதம்.

“அது உங்களுக்குச் சொந்தமானது இல்லையென்றால், அதை நிச்சயம் திருப்பி கொடுத்துவிட வேண்டும்” என்றுள்ளார் வழக்கறிஞரும், மனித உரிமை செயல்பாட்டாளருமான லிலியன் கான்கால்வ்ஸ்-ஹோ காங்.

பொதுவாக, ஐரோப்பாவில் இருக்கும் அருங்காட்சியகங்களில், காலனியாதிக்க காலத்தியப் பொருட்களை, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பியனுப்புவது குறித்த கோரிக்கைகள் எழுவது வழக்கம். இந்நிலையில், ‘பிளாக் லைவ்ஸ்’ இயக்கமானது, இந்த விஷயத்தை மீண்டுமொருமுறை தன் பங்கிற்கு கிளறியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, சோழ மன்னர்களின் அரச சாசனம் மற்றும் கோல்கொண்டா அரசர்களின் சிறிய ஓவியங்கள் ஆகியவற்றை நெதர்லாந்து திருப்பித்தர வேண்டுமென்ற கோரிக்கை உண்டு.