ஜாமியா மிலியா பல்கலை மாணவர்களுக்கு ஆதரவு தரும் ஹாலிவுட் நடிகர்

டில்லி ஜாமியா மிலியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஹாலிவுட் நடிகர் ஜான் குசாக், போராட்டத்திற்கு தமது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு தரப்பில் குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டு, போதிய ஆதரவோடு நிறைவேற்றமும் செய்யப்பட்டது. பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு அச்சட்டம் அமல்படுத்தப்பட்டது. குடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழர்கள் புறக்கணிப்படுவது போல, இஸ்லாமியர்களும் புறக்கணிக்கப்படுவதாகவும், குடியுரிமை சட்டத்தின் மூலம் உள்நாட்டு வாழ் இஸ்லாமியர்களுக்கே ஆபத்து என்றும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, நாகாலாந்து, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நேற்று மாலை போராட்டத்தில் தொடங்கினர். அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசினர். டெல்லி போரட்டத்தின்போது, பேருந்துகள் சிலவும் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த காவலர்கள், மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பல்கலைக்கழக நிர்வாகிகளின் அனுமதியின்றி வளாகத்துக்குள் நுழைந்த காவலர்கள், நூலகம், விடுதிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மசூதி ஆகியவற்றில் இருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பான வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜான் குசாக், தாக்குதலுக்கு தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளதோடு, மாணவர்களுக்கு தனது ஆதரவையும் அளித்துள்ளார்.

You may have missed