சென்னை: கோயில்களில் வழிபாட்டிற்கு பிறகு வழங்கப்படும் வெண்ணெய்களில் புற்றுநோயை உண்டாக்கும் சாயங்கள், கடுகு எண்ணெய் மற்றும் வனஸ்பதி போன்றவை கலந்திருக்கின்றன என்ற அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளனர் உணவுத்துறை அதிகாரிகள்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கிருஷ்ண ஜெயந்தி நெருங்குவதையொட்டி, உணவுத்துறை அதிகாரிகள், சென்னை தியாகராய நகரிலுள்ள சில வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். அங்கே, உண்ணுவதற்கு தகாத நெய் மற்றும் வெண்ணெய்கள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு பெயர்களில் பாக்கெட் செய்து வைக்கப்பட்டிருந்தன.

விஷ்ணு தீப நெய், ஸ்ரீ கிருஷ்ண தீப நெய், ஸ்ரீ ஈஸ்வரி நெய் மற்றும் கிருஷ்ணா வெண்ணைய் போன்ற பெயர்களில் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. அங்கிருந்த ஒரு கிலோ வெண்ணெயின் விலை ரூ.200 மட்டுமே. ஆனால், ஆவினில் ஒரு கிலோ வெண்ணெயின் விலை ரூ.435 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கெடுதி விளைவிக்கும் தயாரிப்புகள், ஒவ்வொரு வாரமும் 4000 டன்கள் அளவில் கடைகள் மற்றும் கோயில்களுக்கு சப்ளை செய்யப்படும் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. அதிலுள்ள லேபிளைப் பார்த்தாலே அவை உண்ணத் தகுதியற்றவை என்பது தெரிந்தாலும், கடவுளின் பிரசாதம் என்பதற்காக அவற்றையெல்லாம் மக்கள் கவனிப்பதில்லை.

உண்ணத்தக்க வெண்ணெய் மற்றும் நெய் தயாரிக்கும் பெரும்பாலான உற்பத்தியாளர்கள், தங்களின் உற்பத்தி செயல்முறையில் தவறான வழிமுறையையே கையாள்கிறார்கள். இது மோசமான விதிமுறை மீறலாகும். இதனால், உண்ணத்தக்கவற்றிலும் ஆபத்தான ரசாயனங்கள் கலந்துவிடும் ஆபத்துள்ளது. கைப்பற்றப்பட்ட மாதிரிகளை பரிசோதனை சாலைக்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.