ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதால், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்கும் பணி தொடங்கி உள்ளது. சுமார் 2050பேர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 320 பேராக குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. முன்னதாக காஷ்மீரில் ராணுவத்தினர் குவிக்கப்பட்ட நிலையில், தொலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,  பிரதான அரசியல்வாதிகள், பிரிவினைவாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர்  வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் சுமார் 2,050 பேர் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதாக கூறப் பட்டது. தற்போது அங்கு பதற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், கடந்த ஒரு வாரமாக படிப்படியாக பலர் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இன்றைய கணக்கின்படி 320 பேர் மட்டுமே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், மற்ற அனைவரும் விடுதலையாகி விட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இவர்களில் பலர் தற்போதைய அரசியலில் செயலற்றவர்கள், காவலில் வைக்க முடியாத அளவுக்கு வயதானவர்கள் என கண்டறியப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், சிலரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டும், ஒருசிலர் தனிப்பட்ட ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளில் பலர் ஆகஸ்டு மாதம் 2வதுவாரத்திலேயே, ஆக்ரா, ஜெய்ப்பூர், டெல்லி மற்றும் வேறு சில பகுதிகளில் உள்ள சிறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தாகவும், அவர்களது குடும்பத்தினருக்கு அவர்கள் இருக்கும் இடம் பற்றி தெரியும். அவர்கள் குடும்பங்களுடனான சந்திப்பை எளிதாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

முக்கிய அரசியல் கட்சித்தலைவர்களான உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி  உள்பட சில தலைவர்கள்  தொடர்ந்து வீட்டுக் காவலில் உள்ளனர்.

முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லா  ஹரி நிவாஸ் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், மெகபூபா முப்தி குப்கர் சாலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாஸ்மே ஷாஹியில் இருக்கிறார்.  இவர்களைச் சுற்றி சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த இரண்டு இடங்களுக்கும் வருபவர்களுக்கு முதலில் பாதுகாப்பு அனுமதி மற்றும் நீதிபதி  அல்லது சிறை கண்காணிப்பாளரின் அனுமதி பெற்று வரும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.  இரு இடங்களும் ஆகஸ்ட் 5 முதல் துணை சிறைச்சாலை யாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதுபோல, தேசிய மாநாடுக் கட்சித்தலைவர்  (என்.சி) தலைவர் ஃபாரூக் அப்துல்லா அவரது வீட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  தற்போதைய அரசியல் கைதிகளின் எண்ணிக்கை 320 முதல் 350 ஆக இருக்கலாம்  என்றும்,  அவர்களில் பெரும்பாலோர் மாநிலத்திற்கு வெளியே உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும்  முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள். உள்பட முக்கிய தலைவர்கள் 54 பேர் தால் ஏரிக்கு அருகிலுள்ள சென்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை குடும்பத்தினர் சந்திக்க கடந்த வாரம் முதல் அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், முன்னாள் முதல்வர்களான உமர், ஃபாரூக் மற்றும் மெஹபூபா ஆகியோரை அங்கு சட்டமன்றத் தேர்தல்கள் முடியும் வரை காஷ்மீருக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள்,  அவர்களை விடுவிக்க வேண்டாம் என்று மத்தியஅரசு கூறியுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.