சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு தமிழகம் வருகிறார். தொடர்ந்து நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில், ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தேர்தலுக்கான கால அவகாசம் குறைவாக உள்ள நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. அதுபோல தேர்தர் பிரசாரமும் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2 நாள் பயணமாக இன்று இரவு  சென்னை வருகிறார். இரவு 10 மணியளவில் சென்னை வரும் நிலையில், நாளை காரைக்கால் மற்றும் விழுப்புரத்தில் நடைபெறவுள்ள பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதைத்தொடர்ந்து,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமையை சந்தித்து பேசுகிறார்.

தமிழகத்தில்  பாஜக எப்படியும் காலூன்ற  வேண்டும் என்று ஆசைப்படும் பாஜக தலைமை, அதிகளவில் வேட்பாளர்களை சட்டப்பேரவைக்குள் அனுப்ப வேண்டும் என்று முடிவெடுத்துள்ளது.  இது தொடர்பாக அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 14 ஆம் தேதி பிரதமர் மோடி (PM Modi) ஒருநாள் பயணமாக சென்னைக்கு வருகை தந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை (Edappadi Palaniswami) தனியாக அழைத்து பேசிவிட்டு சென்றார். இந்த சூழலில் அமித்ஷாவின் வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அதிமுக பாஜக இடையே இன்று முதல்கட்ட கூட்டணி, தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நாளை அமித்ஷாவுடன் முதல்வர் பேசி, தொகுதி ஒதுக்கீடு முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.