காஷ்மீர் : நகராட்சி தேர்தலுக்கு தயாராக மத்திய அரசு உத்தரவு
ஸ்ரீநகர்
காஷ்மீர் மாநிலத்தில் நகராட்சி தேர்தல் நடத்த தயாராகும் படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2005 ம் வருடத்துக்குப் பின் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற வில்லை. இம்மாநிலத்தில் ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் மாநகராட்சி உட்பட 78 நகராட்சிகள் உள்ளன. இது தவிர கிராம பஞ்சாயத்துக்களும் உள்ளன. இந்த பஞ்சாயத்துக்களுக்கு கடைசியாக 2011 ஆம் வருடம் தேர்தல் நடந்துள்ளது.
இந்த அமைப்புக்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என முந்தைய பாஜக – பிடிபி கூட்டணி அரசின் முதல்வர் முப்தி மெகபூபா முடிவெடுத்திருந்தார். அதன்படி நகராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது. அதே நேரத்தில் தேர்தலில் போட்டியிடுவோர் கண்களில் அமிலம் ஊற்றப்படும் என ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் ராஜ்நாத் சிங் அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் காஷ்மீர் மாநில கவர்னரை கடந்த வியாழன் அன்று சந்தித்தார். அப்போது நகாராட்சி தேர்தல்கள் நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்பு திட்டமிட்ட படி வரும் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி முதல் நான்கு கட்டமாக மாநிலத்தில் நகராட்சி தேர்தல்கள் நடத்த தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து தயாராகும்படி காஷ்மீர் மாநில கவர்னருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு 40000 மத்திய ஆயுதப் பாதுகாப்புப் படையினர் இப்போதிருந்தே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நேர்மையாக நடைபெற சூழ்நிலைகளை தயாராக வைத்திருக்கும் படி அமைச்சர் ராஜ்நாத் சிங் கவர்னரிடம் கூறி உள்ளார்.