புதுடெல்லி: பெங்களூருவிலுள்ள அரசுசாரா தொண்டு நிறுவனமான இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷனின் பதிவை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிப் பெறும் விஷயத்தில், விதிமுறைகளை அந்நிறுவனம் மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு தன்னார்வ தொண்டு நிறுவனமும், வெளிநாட்டு நிதியைப் பெற வேண்டுமெனில், வெளிநாட்டு பங்களிப்பு(ஒழுங்குமுறை) சட்டத்தின்கீழ் பதிவுசெய்திருக்க வேண்டுமென்பது கட்டாயம்.

கடந்த 6 ஆண்டுகளாக, தங்களுடைய வருவாய் மற்றும் செலவினங்கள் தொடர்பாக, இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் தரப்பிலிருந்து எந்த விவர அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்திலிருந்து அறிக்கை அளிக்க வேண்டி தொடர்ந்து நினைவுறுத்தப்பட்டும், நிறுவனம் சார்பில் எந்த பதிலும் தரப்படாமல் இருந்த காரணத்தாலேயே, விதிமுறைகளை மீறிய காரணத்தால் அமைச்சகம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.