நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு! மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. தற்போதுள்ள  கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள்  மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  மத்திய அரசின் உள்துறை அமைச்சகம்  உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு  உயர்ந்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென உயர்ந்துகொண்டே வருகிறது. தமிழகத்திலும் கடந்த ஒரு வாரமாக தொற்று பாதிப்பு உயரத்தொடங்கி உள்ளது. அதுபோல  ஜம்மூ காஷ்மீரிலும் கொரோனா பாதிப்பு சில தினங்களாக உயர்ந்து வருகிறது.  இந்நிலையில், நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நாடு முழுவதும கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாவோர், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து முழுமையாக வெளியே வர கண்காணிப்பு, கட்டுப்பாடு, அவசியம். அதன்படி கடந்த மாதம் 27-ந் தேதி வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் தொடர்ந்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவும்,  தொற்று பாதிப்பில் இருந்து  வளியே  வரவும் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இலக்கு மக்களுக்கு தடுப்பூசி போடுவதை மாநிலஅரசுகள்  விரைவுபடுத்த வேண்டும்.
கட்டுப்பாட்டு மண்டலங்கள் தொடர்ந்து கவனமாக வரையறுக்கப்பட வேண்டும்.
கொரோனா கால கட்டுப்பாட்டு விதிமுறைகள் கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில், வழிகாட்டு நெறிமுறைகள் துல்லியமாக பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.