டெல்லி: மே 31ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு செய்து, ஊரடங்கு வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
நாடு முழுவதும் ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 4வது கட்ட ஊரடங்குக்கான புதிய வழிமுறைகளை  மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மண்டலம் வாரியாக வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு: பொது இடங்களில் பணியாற்றும் இடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி தரப்படுகிறது.
இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வீட்டிலேயே தங்கி இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து விதமான பயணிகள் விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்.
பேருந்து பொதுப்போக்குவரத்தை துவங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். அலுவலகங்களில் வெப்ப சோதனை, கை கழுவுதல் அவசியம். மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் நடமாட்டத்தை தடுக்க கூடாது. பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.
கடைகளுக்குள் 6 அடி இடைவெளியில் வாடிக்கையாளர்கள் நிற்கலாம். 5 பேருக்கு மேல் நிற்க அனுமதி இல்லை. பொது இடங்களில் மது, புகையிலைப்பொருட்கள் பயன்படுத்த கூடாது. திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களில் சமூக இடைவெளி அவசியம்.
50 நபர்களுக்கு மேல் கூட தடை விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். அனைத்துவிதமான பயணிகள் விமானசேவைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்.
சரக்கு வாகனங்கள் மாநிலங்கள் இடையே வந்து செல்ல தடை இல்லை. மரணம் உள்ளிட்ட துக்க நிகழ்ச்சிகளில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு வீட்டுக்கு வீடு ஆய்வு செய்யப்படும்.
மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இரு மாநில சம்மத்துடன் இயக்கலாம்.மெட்ரோ ரெயில் சேவைக்கு விதிக்கப்பட்ட தடையும் தொடர்ந்து அமலில் இருக்கும். விளையாட்டரங்கு, ஸ்டேடியம் திறந்து கொள்ள அனுமதி, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
விமானம், ரெயில் சேவை, திரையரங்குகள், வணிக வளாகங்கள் செயல்பட விதித்த தடை தொடரும். வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மதம் சார்ந்த இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பேருந்து செல்ல நிபந்தனையுடன் அனுமதிக்கலாம். பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி தரப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், சிவப்பு மண்டலங்கள் குறித்து மாநிலங்களே முடிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.