போர் மூண்டால் பாகிஸ்தான் அடியோடு அழிக்கப்படும் : மத்திய இணை அமைச்சர் எச்சரிக்கை

டில்லி

பாகிஸ்தானுடன் போர் மூண்டால் அந்நாடு உலக வரைபடத்தில் இருந்து அடியோடு அழிக்கப்படும் என மத்திய உள்துறை இணையமச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசு விதி எண் 370ஐ விலக்கிக் கொண்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்துள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.   அத்துடன் காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.   இதையொட்டி அந்தப் பகுதியில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   இந்தியாவுக்குப் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.   ஐநா பாதுகாப்புக் குழு உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் அளித்த புகார் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவுடன் போர் மூளும் எனப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அமைச்சர்கள் பேசி வருகின்றனர்,  மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி ஒரு கூட்டத்தில் பேசும் போது, “பாகிஸ்தான் ராணுவம் மற்றும் இம்ரான் கான் கூச்சலிடுவதைக் கண்டு யாரும் பயப்படப் போவதில்லை.  இந்தியப் பிரதமர் அப்படிப் பயப்படுபவர் இல்லை.   நாட்டின் உரிமையையும் ஒற்றுமையும் காக்கும் அரசு தற்போது உள்ளது.  இது தேச நலனுக்கான அரசாகும்.

நேரம் வரும் போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதில் இந்திய அரசு கவனம் செலுத்தும்.   விதி எண் 370 அமலில் இருந்த  போது மாநிலத்தில் தீவிர வாதம், பிரிவினை வாதம் மற்றும் பாகிஸ்தான் ஆதரவுவாதிகளின் வெறியாட்டம் நிலவி வந்தது.   விதி எண் 370 விலக்கப்பட்டு ஒரு மாதமாகத் துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப் புகை தாக்குதல், கொலை எதுவும் நிகழாதது பெருமைக்குரியதாகும்.

விதி எண் 370 அமலில் இருந்த போது பாகிஸ்தானுடன் 1947, 1965, 1971 மற்றும் 1999 ஆகிய வருடங்களுடன் இந்தியா போரிட நேர்ந்தது.   தீவிரவாதம் காரணமாகக் கடந்த 1990 முதல் 42000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.   விடுதலைக்குப் பிறகு 70 வருடங்களாக மாநிலத்தில் வறுமை, வேலையின்மை, தீவிரவாதம், ரத்தம் சிந்துதல், ஊரடங்கு சட்டங்கள்,  குண்டு வெடிப்புக்கள் மட்டுமே இருந்து வந்துள்ளன.

ஆயிரக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டு லட்சக்கணக்கான காஷ்மீர் பண்டிட்டுகளும் இந்துக்களும் அங்கிருந்து விரட்டப்பட்டனர்.   தற்போது காஷ்மீர் பகுதியில் விதி எண் 370 நீக்கப்பட்டதால் அந்தப் பகுதி இந்தியாவில் இணைக்கப்பட்டுள்ளது.  இதில் இம்ரான் கானுக்கு என்ன வந்தது எனத் தெரியவில்லை.   மீண்டும் இந்தியாவுடன் பாகிஸ்தான் போர் தொடர்ந்தால் அந்நாடு உலக வரைப்படத்தில் இருந்து அடியோடு அழிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.