2013-கேதர்நாத் வெள்ளக் கொடுமைக்கு காரணம் என்ன? துவாரகா சாமியாரின் புதுக்கண்டுபிடிப்பு
மகாராஷ்ட்ராவில் உள்ள சனிபகவான் கோயிலுக்குள் பெண்கள்  நுழைந்ததால் கற்பழிப்பு அதிகரிக்கும் என்று சரவெடி கொளுத்திப்போட்ட துவாரகா சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி  தற்போது அடுத்த சர்ச்சைக்கும் அடுப்பு மூட்டிவிட்டார். அதாவது, கேதர்நாத் வெள்ளத்திற்கு  காரணம் அங்கு தேனிலவு ஜோடிகளும், சுற்றுலாவாசிகளும் சென்றதே  காரணம் என்று  அவர் கூறி உள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம், கடந்த 2013–ம் ஆண்டு வரலாறு காணாத மழை வெள்ளத்தால்  சிக்கித் தவித்தது. கனமழையை தொடர்ந்து  ஏற்பட்ட பெருவெள்ளத்தால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் கேதர்நாத் கோவிலுக்கு சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
Saraswat-ji-15409
இந்த பேரழிவிற்கு காரணம் என்னவென்று 94 வயது துவாரகா சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி கூறியிருப்பதாவது:-
“நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து தெய்வபூமியான உத்தரகாண்ட்டுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். அப்படி வருவோர்  உல்லாசக் கேளிக்கைகள்,  கூடிக்குலாவுதல், மற்றும் தேனிலவு ஆகியவற்றுக்காகவே வருகின்றனர்.அவர்களின் வருகைதான் கேதர்நாத் பேரழிவுக்கு காரணம்.
புனிதம் கெடும்  இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் மீண்டும் இதுபோன்ற பேரழிவு சம்பவங்கள் தொடரும். அதை யாராலும் தடுக்கமுடியாது.,” என்று கூறியுள்ளார். கடந்த ஞாயிறு அன்று துவாரகா சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி பேசுகையில், மராட்டியத்தில் உள்ள சனிபகவான் கோவிலில் பெண்கள் நுழைந்ததால் கற்பழிப்புகள் அதிகரிக்கும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிரா வறட்சிக்கான காரணம் பற்றி இச்சாமியார் கூறியிருந்த கருத்துகள் ஏற்கனவே சாய்பாபா பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து பெண்கள், சனி கோயிலுக்குள் பெண்கள் நுழைந்த்தால் கற்பழிப்புகள் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். சாமியாரின் இந்தக் கருத்துக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு  மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அவர் சமூகவலைத்தளமான தனது ட்விட்டர் பக்கத்தில் “ சாய்பாபா பக்தர்களை புண்படுத்தும் வகையில் மகாராஷ்ட்ராவின் வறட்சி மற்றும் சனி கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததால் கற்பழிப்பு மற்றும் குற்றச் செயல்கள் அதிகரிக்கும் என்ற சுவாமிஜியின் இந்தக் கருத்து ஏற்புடையதல்ல. இதனை மறுக்கிறேன்., எனக்கூறியுள்ளார்.