மே 3ஆம் தேதி வரை இந்திய விமானங்கள் ஹாங்காங் வர தடை! ஹாங்காங் அரசு அறிவிப்பு

ஹாங்காங்: இந்தியாவில் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதால்,  ஏப்ரல் 20ந்தேதி முதல் மே 3ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து இணைப்பு விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சம்பெற்றுள்ளது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதனால், உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது. இதைத்தொடர்ந்து டெல்லி, தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பொதுமுடக்கம், பகுதி நேர பொதுமுடக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக,  நாளை (ஏப்ரல் 20ந்தேதி)  முதல்  மே மாதம் 3ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து இணைப்பு விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே  மும்பை – ஹாங்காங் இடையேயான விஸ்தரா விமானங்களை மே 2 ஆம் தேதி வரை ஹாங்காங் அரசு ரத்து செய்து செய்திருந்த நிலையில், தற்போது அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது. மேலும் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாட்டுடனான விமான சேவைகளையும் ஹாங்காங் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.