பண்ருட்டி:
சென்னை ஐடி ஊழியர் சுவாதி படுகொலை சாதி ஆணவக் கொலையாக இருக்க வாய்ப்புள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்  தெரிவித்துள்ளார். தங்கள் வீட்டுப் பெண், காதல் கலப்பு மணம் செய்துகொண்டால்  பெண்ணின் குடும்பத்தாரே பெண்ணையும் அவரது காதல் கணவரையும் கொல்லும் ஆணவப்படுகொலைகள் தமிழகத்தில் நடந்துவரும் நிலையில், திருமாவளவன் இப்படியோர் தகவலை வெளியிட்டுள்ளது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் பல்வேறு மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலே இருக்கின்றன.  கொலையாளி யாரென்று காவல்துறையினருக்கே தெரியாத ஆரம்பகட்ட நிலையிலேயே   காமெடி நடிகர்கள் ஒய்.ஜி. மகேந்திரன், எஸ்.வி. சேகர் ஆகியோர், பிலால் மாலிக் என்பவருக்கு தொடர்பிருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினர்.

திருமா - சுவாதி
திருமா – சுவாதி

பின்னர் நெல்லை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை கொலையாளி என கூறி  காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் சுவாதியின் நண்பர் முகமது பிலால் சித்திக் என்பவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதனிடையே சுவாதி, ரம்ஜான் பண்டிகையின் போது நோன்பு இருந்ததாகவும், அவர் விரைவில் இஸ்லாமுக்கு மாறிவிடுவார் என்ற தகவல் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தெரிந்திருந்ததாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலைியல் பண்ருட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன் சுவாதி படுகொலை ஒரு சாதி ஆணவக் கொலையாக இருக்க வாய்ப்புள்ளது என திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
பண்ருட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுவாதி கொலை வழக்கில் தாம் தெரிவித்த கருத்துகளை ஹெச். ராஜா போன்றோர் திசை திருப்ப பார்க்கின்றனர். மேலும் சுவாதி கொலையில் முதலில் சந்தேகத்தை கிளப்பியது வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்திதான்… இவ்வழக்கில் முகமது பிலால் சித்திக் போலீசிடம் தெரிவித்தது என்ன என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.