கேரளாவை சார்ந்த அகிலா என்ற பெண் இஸ்லாம் மதத்திற்கு மாறி ஹாதியாவாக தன் பெயரை மாற்றிக்கொண்டு ஷபீன் ஜஹான் என்ற முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்து கொண்டது இந்தியா முழுக்க பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பன்மயப்பட்ட இந்திய சமூகத்தில்  காதல் என்பதின் வரலாற்று வேர் குறித்தும் நாம் பார்க்க வேண்டியதிருக்கிறது. மனித குலம் நாடோடியாக இருந்து நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி வாழும் நிலை ஏற்பட்ட தருணத்திலேயே காதலும் உருவாகி விட்டது எனலாம்.

ஓரிடத்தில் நிலையாக தங்கி வாழ்ந்த இனக்குழுக்கள் தங்களை பலப்படுத்திக்கொள்ளவும், தங்களை பரஸ்பரம் அடையாளப்படுத்திக்கொள்ளவும் தேவை ஏற்பட்ட சூழலில் ஆண் பெண் திருமணம் என்ற முறை உருவானது. இங்கு ஒருவனுக்கு ஒருத்தியாகவோ அல்லது ஒருவனுக்கு பல பெண்களாகவோ, அல்லது பல பெண்களுக்கு ஓர் ஆணாகவோ இந்த நடைமுறை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியில் இனக்குழுக்கள் நன்கு அடையாளமிட்ட இனங்களாக, குலங்களாக, சாதிகளாக, மதங்களாக உருவான தருணத்தில் அக மண முறை ஏற்பட்டது.

அதாவது திருமணம் என்பது ஆணோ , பெண்ணோ குறிப்பிட்ட இனத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்றது. அதற்கு வெளியில் திருமணம் செய்தால் அவர்கள் தண்டிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த அதீத கட்டுப்பாடுகள் இனக்குழுக்கள்/சாதிகள்/மதங்கள் சார்ந்த ஆண்களையும், பெண்களையும் மீறலுக்கு உட்படுத்தி இருக்க வேண்டும். இதுவே பின்னாளில் காதலாக அறியப்பட்டது. அதாவது வேறுபட்ட இனங்கள் சார்ந்த பாலினக்கவர்ச்சி இருதரப்பினருக்குமே உருவாகும் சூழல் அது காதலாக மாறியது. மனிதனின் பாலியல் வேட்கையும், தேடலும் குறிப்பிட்ட சட்டகத்திற்குள் அடைக்க முடியாத ஒன்று. கிரேக்க தேவதைகள், கிளியோபட்ரா போன்றவர்களின் கதைகள் இதை தான் உணர்த்துகின்றன.

இந்தியா போன்ற பன்முக சமூக அமைப்பையும், கலாச்சாரத்தையும் கொண்ட நாட்டில் இம்மாதிரி யான ஆண், பெண் காதல் வழக்கம் சாதாரணமான ஒன்றே. புராண

காலத்திலேயே இது தொடர்கிறது. மட்டுமல்ல பன்முக சமூக கலப்பு முறை நிலவும் உலகின் பிற பிரதேசங்களிலும் இது வழக்கமே. நிறவெறி முறை அமலில் இருக்கும் மேற்கத்திய உலகில் கூட இது சகஜமே. கருப்பின ஆண் வெள்ளை இன பெண்ணை திருமணம் செய்து கொள்வதும், வெள்ளை இன ஆண் கருப்பின பெண்ணை திருமணம் செய்து கொள்வதும் அங்கு வழக்கமே. இந்நிலையில் சாதி மற்றும் மதவாதம் மேலோங்கி வரும் இந்தியாவில் இது லவ்ஜிகாத் என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. இந்து மதத்தை சார்ந்த பெண் மதம் மாறி இஸ்லாம் மதத்தை சார்ந்த ஓர் ஆணை காதலித்து திருமணம் செய்தால் அதை லவ் ஜிகாத் என்று இந்துத்துவ அமைப்பினர் அழைக்கின்றனர்.

அதே நேரத்தில் இதற்கு எதிரிடையாக  இந்து மதத்தை சார்ந்த ஆண் இஸ்லாம் மதத்தை சார்ந்த பெண்ணை மதம் மாற்றி திருமணம் செய்தால் என்ன பெயர் என்று இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கிறிஸ்தவ மதத்தை சார்ந்த ஆண் ஒருவர் இந்து பெண்ணை திருமணம் செய்தால் லவ்ஜிகாத் படி அதற்கு லவ் இவாஞ்சல் என்று பெயரிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை. காரணம் கிறிஸ்தவ ஆண் ஒருவர் இந்து பெண்ணை திருமணம் செய்தாலும் சாதிய முறை இங்கு தக்கவைக்கப்படுகிறது . திருமணத்திற்கு பின்பும் அந்த பெண் அதே சாதிய அடையாளத்தோடு வாழ முடியும். அவளின் நம்பிக்கை மட்டுமே மாறுகிறது. அது தான் காரணம். இப்போதைய பரபரப்பிற்கு கேரளாவில் நடந்த ஒரு சம்பவம் தான் காரணம்.

கேரளாவின் வைக்கம் நகருக்கு அருகே டி.வி. புரம் என்ற பகுதியை சார்ந்த அசோகன் மற்றும் பொன்னம்மாள் தம்பதியரின் ஒரே மகளான அகிலா ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவைசிகிட்சையில் இளநிலை பட்டப்படிப்பு படிப்பதற்காக 2011 ஆம் ஆண்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்தார். சேலம் வந்த பின் அவளின் நடவடிக்கைகள் மாறத்தொடங்கின.

இஸ்லாம் குறித்து அதிகம் படிக்கத்தொடங்கினாள். இஸ்லாமிய நண்பர்களுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்ட பின் அவள் அம்மதத்தை பின்பற்றத் தொடங்கினார். இந்நிலையில் மகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அகிலாவின் தந்தை அசோகன் கேரள

உயர்நீதிமன்றத்தில் தன் மகள் கட்டாயப்படுத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டதாக வழக்குத் தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அகிலாவிடம் விளக்கம் கேட்டது. இதனை ஏற்று நீதிமன்றத்தில் ஆஜரான அகிலா தான் விரும்பி தான் இஸ்லாமுக்கு மாறியதாகவும், யாருடைய கட்டாயப்படுத்தலின் பேரிலும் மதம்  மாறவில்லை என்றார்.

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கேரள உயர்நீதிமன்றம் அகிலா தந்தையின் வழக்கை தள்ளுபடி செய்தது. இதன் தொடர்ச்சியில் கடந்த வருடம் ஜுலை 2016 ல் அகிலா தன் பெயரை ஹாதியா என்று அதிகாரபூர்வமாக மாற்றிக்கொண்டு அதற்கான சான்றிதழையும் பெற்றார். இங்கிருந்து தான் பிரச்சினையின் வெடிப்பே உருவானது. அகிலா ஹாதியாவாக மாறியதை சகித்துக்கொள்ள முடியாத இந்துத்துவ அமைப்பினர் இந்த விஷயத்தை கையிலெடுத்து அரசியலாக்கின. ஹாதியாவின் தந்தை உடனடியாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இஸ்லாமிய அமைப்புகள் தங்களின் மகளை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் தன் மகளை சேர்த்து விட முடிவு செய்திருப்பதாகவும் வழக்கில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் போதே 2016 டிசம்பரில் ஹாதியா ஷபீன் ஜஹான் என்ற முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்து கொள்கிறார். இது ஒட்டுமொத்த பிரச்சினையை இன்னும் தீவிரமாக்கியது. ஹாதியாவை திருமணம் செய்த இளைஞர் கேரளாவின் பிரபல இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் உறுப்பினர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த கேரள உயர்நீதி மன்றம் இந்த திருமணத்தை ரத்து செய்து உத்தரவிடுகிறது.

இதன் தொடர்ச்சியில் ஹாதியா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். அவரின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஹாதியாவின் கணவர் ஷபீன் ஜஹான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த பின்னணி குறித்த ஆராய தேசிய புலனாய்வு அமைப்பிற்கு

உத்தரவிட்டது. இதனை தேசிய புலனாய்வு நிறுவனம் ஆராய்ந்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருக்கிறது.  இந்நிலையில் ஹாதியாவை வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. அதற்காக குறும்படங்கள் கூட எடுக்கப்பட்டிருக்கின்றன.

ஹாதியா இஸ்லாம் மதத்தை தழுவிய சம்பவம் சுவாரசியமானது. பள்ளிப்படிப்பு படிக்கும் காலத்தில் அவளுக்கு பெரிய அளவில் பிற மத தோழிகள் இல்லை. அதே நேரத்தில் சேலத்தில் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தான் அவளுக்கு முஸ்லிம் தோழிகள் அறிமுகம் ஆனார்கள். சேலம் ஓமியோபதி கல்லூரியில் ஒரு வருடம் கல்லூரி விடுதியில் தங்கிய ஹாதியா பின்பு அது ஒத்துவராததால் தோழிகளுடன் இணைந்து தனியாக வீடு எடுத்து தங்கினார். அங்கு தான்  இந்தியா முழுக்க பேசப்படும் நபராக தான் மாறுவதற்கான தொடக்கமிடப்பட்டது. தன்னுடன் தங்கி இருந்த இஸ்லாமிய தோழிகளின் நடவடிக்கைகளை பார்த்து அவர் இஸ்லாம் குறித்து அறிந்து கொள்ளத்தொடங்கினார்.

அது தொடர்பான புத்தகங்களை படித்தார். மத பிரச்சார சி.டிக்களை கேட்கத் தொடங்கினார். (தமிழ்நாட்டை பொறுத்தவரை இதை இலவசமாக விநியோகிப்பதற்கே பல இஸ்லாமிய அமைப்புகள் இருக்கின்றன.) இதன் மூலம் அவருக்கு இஸ்லாமிய மதத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. தன் தோழியின் தந்தையிடம் தன் விருப்பத்தை பகிர்ந்து கொண்ட ஹாதியா பின்னர் மலப்புரம் மாவட்டம் பொன்னானியில் இருக்கும் தர்பியத்துல் இஸ்லாம் என்ற அமைப்பின் மூலம் தன் பெயரை ஹாதியாவாக மாற்றிக்கொண்டு இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். இது அகிலாவை கட்டாயப்படுத்தி மதம் மாற வைத்ததாக அங்குள்ள இந்துத்துவ அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

இந்தியாவை பொறுத்தவரை 18 வயது நிரம்பிய ஆணோ, பெண்ணோ தன் விருப்பப்படியான முடிவுகளை எடுக்க யாரும் குறுக்கே நிற்க முடியாது என்கிறது நம் அரசியலமைப்பு சட்டம். அவ்வகையில் சம்பந்தப்பட்டவர்கள் மதம் மாறலாம். காதலித்து வேறொரு சாதியை அல்லது மதத்தை சார்ந்தவர்களை திருமணம் செய்யலாம். இதில் தடை ஏதும் இல்லை. ஆனால் சமூகம் தான் இதற்கு பெரிய தடையாக இருக்கிறது. ஒரு தலித் இளைஞர் இடைநிலை சாதியை சார்ந்த  பெண்ணை திருமணம் செய்தால் அவளின் குடும்பத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு சம்பந்தப்பட்ட பெண் கொலை செய்யப்படுகிறாள். சில சமயங்களில் சம்பந்தப்பட்ட ஆணும் கொலை செய்யப்படுகிறான். இம்மாதிரியான ஆணவக்கொலைகள் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.  தர்மபுரி இளவரசன், உடுமலை சங்கர், சேலம் கோகுல் போன்றவர்கள் அதற்கு உதாரணம். இந்நிலையில் மதங்களை பொறுத்தவரை இஸ்லாமும், கிறிஸ்தவமும் அதை பின்பற்றுபவர்களை பிறப்பின் அடிப்படையில் தீர்மானிப்பதில்லை. மாறாக மாறுவது மூலம் தான் தீர்மானிக்கிறது.

உலகில் யார் வேண்டுமானாலும் இவ்விரு மதங்களுக்கு மாற முடியும். இதன் அடிப்படையில் இந்தியாவில் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் முன்பொரு காலத்தில் பல சாதிகளில் இருந்து அதற்கு மாறியவர்களே. இப்போதும் கூட இந்தியாவில் மதமாற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதில் காதல் என்பது ஒரு கருவியே. அதே நேரத்தில் பன்முக சமூக அமைப்பில் காதல் என்பது சாதி மதம் கடந்து தான் உருவாகிறது.  இங்கு ஒருவழிப்பாதையாகத் தான் காதல் இருக்க வேண்டும் என்று மேலாதிக்க சக்திகள் கட்டுப்பாடு விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்து பெண்கள் இஸ்லாத்திற்கு மாறலாம். அதே நேரத்தில்  இஸ்லாமிய ஆணோ , பெண்ணோ மாறக்கூடாது என்பது தார்மீக நெறி முறைப்படி சரியல்ல.

இந்து மதத்தை பொறுத்தவரை ஒருவர் அங்கு மாற முடியாது. காரணம் அங்கு அடிப்படையான சாதிய அடையாளம் என்பது பிறப்பின் அடிப்படையில் வருவது. இருந்தும் இதற்கு பதிலடியாக இந்துத்துவ அமைப்புகள் பல இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ பெண்களை திருமணம் மூலம் தாய்மதத்திற்கு திரும்பும் நடவடிக்கைகளை தொடங்கி இருக்கின்றன. அதே நேரத்தில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்திற்கு ஒருவர் எளிதாக மாறி விட முடியும். இந்நிலையில் லவ்ஜிகாத்  போன்ற வார்த்தை பிரயோகங்கள் அவசியமற்றவை. மேலும் சாதி கடந்த காதல் கூட ஒருவழிப்பாதையாக தீர்மானிக்கப்படுவது அபத்தமானது.

இந்நிலையில் ஒருவரின் காதல் என்பது முழுக்க முழுக்க தனிநபர் சார்ந்தது. இந்தியாவை பொறுத்தவரை குடும்பம் என்ற அமைப்பு  அதை தீர்மானிப்பதால்  தான் பிரச்சினை எழுகிறது. ஆணவக்கொலைகளும், வகுப்பு பதட்டங்களும் உருவாகின்றன. இந்நிலையில் மத்திய அரசும், மாநில அரசாங்கங்களும் சாதி, மதம் கடந்த திருமணங்களை அங்கீகரிப்பதுடன், அந்த தம்பதிகளை பாதுகாக்கும் வகையிலான சட்டத்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். மேலும் ஆணவக்கொலைகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையிலும் சட்டம் இயற்ற வேண்டும். அப்போது தான் இம்மாதிரியான முடிவுகளை எடுப்பவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். இந்திய அரசியலமைப்பு வழங்கி இருக்கும் அடிப்படை தனிமனித சுதந்திரமும் அர்த்தமுள்ளதாக மாறும்.

mohammed.peer1@gmail.com