புலந்த்சாஹர்:

எனது இயக்கத்தில் இருந்து இன்னொரு கெஜ்ரிவால் உருவாகமாட்டார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர் மற்றும் லோக்பால் மசோதாவை அமல்படுத்த வலியுறுத்தி வந்தவர் அன்னா ஹசாரே. கடந்த 2011ம் ஆண்டு ஊழலை ஒழிப்பதற்காக தனது போராட்டத்தினை வெளிப்படையாக அறிவித்தவர். அவருக்கு ஆதரவாக தற்போதைய டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் போராடினார்.பின்னர் கெஜ்ரிவால் அவரிடம் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கினார்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் ஆக்ராவில் ஹசாரே பேசுகையில், ‘‘சுதந்திரம் பெற்று 70 வருடங்கள் ஆகியும் உண்மையான ஜனநாயகம் இன்னும் இந்தியாவுக்கு கிடைக்கவில்லை. முதலாளிகள் நிறைந்த அரச தேவையில்லை. மோடியோ, ராகுலோ தேவையில்லை. விவசாயிகளின் நலனிற்காக செயல்படும் அரசு தான் தேவை. எனது இயக்கத்தில் இருந்து இன்னொரு கெஜ்ரிவால் உருவாகமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் பாஜக லோக்பால் மசோதாவை அமல்படுத்தவில்லை. ஜி.எஸ்.டி. பொது மக்களுக்கு எந்த நலனையும் செய்யவில்லை. நாட்டின் தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதை வலியுறுத்தியும், விவசாயிகளின் அவல நிலையை எடுத்துரைக்கும் வகையில் டில்லி ராம்லீலா மைதானத்தில் ஜனவரி 23ம் தேதி பேரணி நடத்தப்படும்’’ என்றார்.