அவிநாசி அருகே பயங்கரம்: கேரள அரசு பேருந்துமீது கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்! 20 பேர் பலி

கோவை:

கோவை அருகே அவிநாசி நெடுஞ்சபாலையில், கேரள அரசின் சொகுசுப்பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து   எர்ணாகுளத்துக்கு நேற்று இரவு புறப்பட்டு கேரள அரசு நிறுவனமான  கே.எஸ்.ஆர்.டி.சி சொகுசுப் பேருந்து 48 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. அப்போது, கேரளாவிலிருந்து டைல்ஸ்களை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி வந்த  கண்டெய்னர் வந்துகொண்டிருந்தது. இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே இரண்டும் நேருக்கு நேர் பயங்கரமான மோதிக்கொண்டது.

அதிகாலை 3.15 மணி அளவில் பயணிகள் தூங்கிக்கொண்டிருக்கும் நடைபெற்ற இந்த கோர விபத்தில்,  பேருந்தில் பயணித்த வர்களில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகி உள்ளனர். மேலும்,  20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த  காவல்துறை, தீயணைப்புத்துறை சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தூக்க கலக்கத்தில் வண்டியை ஓட்டியதால், லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பை தாண்டி மறுபுறம் சென்று, எதிரே வந்த பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதாகக் கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் பேருந்தின் ஒரு பகுதியே நசுங்கிவிட்டது. கன்டெய்னரை ஓட்டி வந்த டிரைவர் தப்பியோடிவிட்டார். 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.