திகிலூட்டும் வதந்திகள்! : டி.வி.எஸ். சோமு

 இரு வருடங்களுக்கு முன் முகநூலில் நான் எழுதிய பதிவு. இப்போது பொருத்தமாக இருக்கும்… ஏன், எப்போதுமே பொருத்தமான பதிவுதான் இது!

1238949_323543134456570_1487474113_n

தந்திகளைப் பரப்புவதிலும், நம்புவதிலும் அப்படி ஒரு சுகம், நமது மக்களுக்கு!

“ராத்திரி.. கதவு தட்டற சத்தம் கேட்டு திறந்தா.. கையில பொம்மையோட ஒரு குழந்தை நிக்குதாம். கண்ணுக்கு பதிலா ரெண்டு ஓட்டைங்கதான் இருக்குதாம். நாம சுதாரிக்கிறதுக்குள்ள அந்த ஓட்டைலேருந்து தீப்பொறி வந்து தாக்கி ஆளு காலியாம்! இதுவரைக்கும் மூணு பேரு இப்படி செத்துட்டாங்களாம்!” என்று ஒரு வதந்தி பல வருடங்களுக்கு முன்பு தஞ்சை நகரத்தில் வெகுவேமாகப் பரவியது.

திகிலுடன், எட்டு மணிக்குள் கதவைச் சாத்திக்கொண்டு படுத்தார்கள் மக்கள்.

“அருள் தியேட்டர்ல நைட் சோ பார்க்கப் போனவன், பாத்ரூம் போயிருக்கான். அங்க அந்தரத்துல ஒரு கை மட்டும் தனியா வந்து, “என்னடா சவுக்கியமா?”னு கேட்டிருக்கு. அலறி, சாயஞ்சவன்தான்..!” என்றொரு வதந்தி.

முழுமையாய் நம்பிய மக்கள், பகல் காட்சிக்குக்கூட அருள் தியேட்டருக்கு போவதைத் தவிர்த்தார்கள். பிறகு தியேட்டர்கார்ரகள், “இது வதந்தி… நம்ப வேண்டாம்” என தினசரிகளில், தினசரி கதறினார்கள்.

இதே மாதிரி இன்னொரு விவகாரம்.

தஞ்சை பகுதியில் புகழ் பெற்ற மருத்துவரான விஜயலட்சுமி, கீழவீதியில் பெரிய மருத்துவமனை வைத்திருந்தார். “அந்த டாக்டருகிட்ட தலைவலின்னு போனாலே, மயக்க மருந்து கொடுத்து கிட்னியை கழட்டி (!) எடுத்திடுறாராம்” என்றொரு வதந்தி அதிவேகமாய் பரவியது.

“அந்த ஆசுபத்திரியில இருக்கிற பாதாள அறையில.. பெரிய பெரிய பாட்டில்கள்ல, ஏதோ திரவத்த ஊத்தி, அதில கிட்னிய போட்டு வச்சிருக்காங்களாம். ஆயிரக்கணக்கில கிட்னி இருக்குதாம். வெளிநாட்டுக்கு ஏத்துமதி (!) பண்றாங்களாம்!” என்கிற அளவுக்கு கண், காது, கிட்னி வைத்தெல்லாம் வதந்தி டெவலப் ஆனது. . அந்த மருத்துவரின் தொழில் படுத்துவிட்டது!

சிகிச்சையின்போது எம்.ஜி.ஆர்.
சிகிச்சையின்போது எம்.ஜி.ஆர்.

அவரும் பதறிப்போய் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார். “கிட்னி மாற்று சிகிச்சை செய்வதற்கு பலவித அதிநவீன வசதிகள் வேண்டும். அவை எங்கள் மருத்துவமனையில் கிடையாது. தவிர, கிட்னியை எடுத்து நாட்கணக்கில் பாதுகாத்து வைத்திருக்க முடியாது. மிக முக்கியமாக, எங்கள் மருத்துவமனையில் பாதாள அறையே கிடையாது” என்றெல்லாம் அந்த விளம்பரத்தில் புலம்பியிருந்தார்.

அவ்வளவு ஏன்.. எம்.ஜி.ஆர் சிகிச்சை முடிந்து திரும்பி முதல்வராக பொறுப்பேற்ற பிறகும், “அடேய்! இப்ப முதல்வரா இருக்கிறது எம்ஜியாரு டூப்புடா!” என்று சத்தியம் செய்தவர்களும் உண்டு!

இப்போதும்கூட, வதந்திகளை நம்புவதில் நமது மக்களுக்கு அலாதி மோகம் இருக்கத்தான் செய்கிறது…

“பொருளாதார சிக்கல்கள் தீரும், வறுமை ஒழியும், இந்தியா வல்லரசாகும்!” என்று சொல்லப்படுவதையெல்லாம் நம்பிக்கொண்டுதானே இருக்கிறோம்!