டி.வி.எஸ். சோமு பக்கம்:

நீட் தேர்வு, தேவையா இல்லையா” என்ற விவாதம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கையிலேயே நேற்று அத் தேர்வு நாடு முழுவதும் நடந்து முடிந்திருக்கிறது.  இந்தியாவின் 103 நகரங்களில்  2 ஆயிரத்து 204 தேர்வு மையங்களில் . 11 லட்சம் மாணவர்கள் இத் தேர்வை எழுதியிருக்கிறார்கள்.  தமிழகத்தில் மட்டும் 85 ஆயிரம் பேர் எழுதியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், தேர்வு நடத்தப்பட்ட முறை.. அதாவது.. தேர்வு எழுத வந்த மாணவர்கள் நடத்தப்பட்ட முறை சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.

ஏதோ ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடத்துக்கு செல்வது போல ஏகத்துக்கு கெடுபிடி இருந்திருக்கிறது. பேனா, பென்சில், ரப்பர், வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், புத்தகம், பேனா பவுச், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பென், கால்குலேட்டர், செல்போன், பேஜர், இயர்போன், தொப்பி, கைப்பை, தோள்பை என்று ஏகப்பட்ட விசயங்களுக்க தடா போட்டப்பட்டிருக்கிறது.

மாணவர்களுக்கு பிட் கொடுக்கும் உற்றார் உறவினர்

மாணவியர் தங்கள் தோடு, ஹேர்ப்பின், ஆகியவையும் அகற்றும்படி நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.  கேரள மாநிலம் கண்ணனூரில் மாணவிக். உள்ளாடைகளை அகற்றிய பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர் என்பது உட்சபட்ச அதிர்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது.

நீட் தேர்வு அவசியமா இல்லையா  என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

இது போன்ற மனப்பாட தேர்வு முறையே தேவையில்லை என்பதுதான் கல்வியாளர்களின் கருத்து.

இந்த மனப்பாட தேர்வு முறைதான், காப்பி, பிட் எல்லாவற்றுக்கும் வழி வகுக்கிறது. பீஹாரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உற்றார் உறவினர்கள் ஜன்னல் வழியாக பிட் கொடுக்கும் புகைப்படம் ரொம்பவே பேமஸ் அல்லவா?

அது மட்டுமல்ல.. அதே பீஹாரில், மாநிலத்திலேயே இன்னொரு கூத்தும் அம்பலமானதே. மாநிலத்திலேயே முதல் பத்து இடங்களைப் பிடித்த மாணவர்களிடம் வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளை கேட்டபோது எதற்கும் பதில்தெரியவில்லை.

சரி இதற்கு தீர்வுதான் என்ன?

தேர்வு அறைக்கும் சம்பந்தப்பட்ட புத்தகத்தையே மாணவர்களுக்கு அளித்து, அதிலிருந்து விடைகளைத் தேடி எழுதும்படி சொல்லிவிடலாம்.

இதை நகைச்சுவைக்காக சொல்லவில்லை. இந்த தேர்வு முறை பல மேற்கத்திய நாடுகிளில் உண்டு.

இதுவே சிறந்த தேர்வு முறை என்று கல்வியாளர்களும் தெரிவிக்கிறார்கள்.

ஆச்சரியமாக இருக்கிறதா?

உண்மைதான்.

இதற்கு பெயர், “திறந்த புத்தக தேர்வு முறை”.

மனப்பாடம் செய்யும் முறைக்கு பதிலாக,, மாணவர்கள் தாம் படித்த பாடங்களில் புரிந்து படித்துள்ளார்களா என்பதை சோதிக்கும் விதத்திலும் , அவர்கள் சிந்தித்து பதிலளித்து, உண்மையான திறமையை வெளிப்படுத்தும் விதத்திலும் இந்த திறந்த புத்தக தேர்வு முறை இருக்கும்.

பல மேலை நாடுகளில் கணினி அறிவியல், பொறியியல், அறிவியல், கணிதம் மற்றும் மொழிப்பாடங்கள் போன்றவற்றிற்கு  திறந்த புத்தக தேர்வு முறை நடைமுறையில் உள்ளது.

இதில் ஒரு விசயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  புத்தகத்தை அப்படியே பார்த்து எழுதுவதாக இந்தத் தேர்வுகள் இருக்காது.  புத்தகங்களின் உதவியுடன்  றிப்புகள் கொண்டு எழுதும் தேர்வு இது. இதை வீட்டிலேயே தேர்வு எழுதும் முறையும் அங்கு உண்டு.

இத்தேர்வை பிறருடன்  கலந்து ஆலோசிக்காமலும்  – ஆலோசித்தும் எழுதலாம். ஆனால்  ஆனால் பதிலை மாணவர்கள் தாங்களாகவே சிந்தித்து  தானாக எழுதுவதாக அமையும்.

தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை, நேரடியாக புத்தகத்தை பார்த்து எழுதுவதாக அமையாமல், அவை மாணவனின் உயர் சிந்தனை திறனை சோதிப்பதாக இருக்கும். .

திறந்த புத்தக தேர்வு முறை

இந்தத் தேர்வு முறை,  மாணவர்களின் மனப்பாட திறனை மட்டும் சோதிப்பதாக இருக்காது. தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாடம் சார்ந்த திறனை புதிய சூழலில் பொருத்திப் பார்ப்பதாகவும், பிற சூழலுடன் ஒப்பிட்டு பார்பதாகவும், தாங்கள் கற்றதை ஒரு ஆதாரமாக பயன்படுத்துவதாகவும்  மாணவர்களுக்கு இத் தேர்வு அமையும்.

இப்படிப்பட்ட தேர்வு முறையினால், பாடங்களை முன்கூட்டியே படிக்கத் தேவையில்லை என்று நினைத்துவிட வேண்டாம்.   குறிப்பிட்ட கால அளவுக்குள் தேர்வை எழுதி முடிக்க வேண்டும் என்பதால், தேர்வுக்குரிய பாடப்பகுதிகளை நன்கு படித்து குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

மனப்பாடம் செய்யும் முறை ஒழிந்து, மாணவர்களின் சிந்திக்கும் திறன் வளரும். சமீபத்தில் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில்கூட இதுபோன்ற தேர்வு முறையை குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு அறிமுகப்படுதிதயது.  அரசுத் துறைகள் சிலவற்றில்கூட பதவி உயர்வுக்கு இதே முறையிலான தேர்வு உண்டு.

இந்த, “திறந்த புத்தக தேர்வு முறை”யை, அனைத்து மட்டத்திலும் கொண்டுவந்தால், மாணவர்கள் மனப்பாடம் செய்யும் மக்குகளாக இருக்க அவசியமில்லை. பிறர் எழுதுவதை அல்லது குறிப்புகளை திருட்டுத்தனமாக பார்த்து எழுத வேண்டியதில்லை. அதோடு, உள்ளாடைகளை அவிழ்க்கச் சொல்லும் மூடத்தனமான தேர்வு அதிகாரிகளும் இருக்க மாட்டார்கள்.