நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், (பட்ஜெட்) 2017ல், குஜராத்தில் ஒரு ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை துவங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஆனால்  குஜராத் முதல்வராக மோடி இருந்த போது செய்த ஒரு அதிர்ச்சிகரமான செயலை அனைவரும் மறந்துவிட்டனர்.

குஜராத் மாநிலத்தில்… பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய  கட்ச் பகுதியில் ஜனவரி 26, 2001 அன்று, பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை எவரும் மறந்திருக்க முடியாது.  அது ஒரு பெரும்  பேரழிவு. ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். பல்வேறு கட்டிடங்கள் சுக்குநூறாக இடிந்தன.

அவ்வாறு இடிந்த கட்டிடங்களில் ஒன்று புஜ் மாவட்டத் தலைநகர் கட்ச்சில் இருந்த அரசுத் தலைமை மருத்துவமனையாகும்.அந்த மருத்துவமனையில்  இருந்த , மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் என   200-க்கும் மேற்பட்டவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரோடு புதையுண்டனர்.

அப்போதைய  பாரத பிரதமராக இருந்த  அடல் பிஹாரி வாஜ்பாய் கட்ச் பகுதிக்கு வந்து, இரண்டு நாட்கள் தங்கினார். மீட்பு பணிகளை நேரடியாக மேற்பார்வையிட்டார்.  புதையுண்ட அந்த கட்ஜ் அரசு மருத்துவமனைக்கு பதிலாக ஒரு புதிய மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார். இதை தலைசிறந்த மருத்துவமனையாய்  உருவாக்குவதே   தனது நோக்கம் என்று தெரிவித்தார்

டில்லி எய்ம்ஸ் தவிர நாட்டின் நான்கு மண்டலங்களில் புதிதாக நான்கு எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்கப்படும் என்றும், அதில்  ஒன்றாக கட்ச் பகுதியில் அமைக்கப்படும் புதிய மருத்துவமனை இருக்கும் என்றும் அறிவித்தார்.

இந்த மருத்துவமனையை கட்ட உடனடியாக பிரதமர் நிவாரண நிதியிலிருந்து  100 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தார். அன்றைய குஜராத் முதல்வர் கேசுபாய் பட்டேலிடம், இந்த மருத்துவமனை திட்டத்திற்கு நிதி ஒரு தடையாய் இருக்காது என்று உறுதியளித்தார்.

சீனா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய பூகம்பம் நடக்கக்கூடிய மண்டலங்களில் எவ்வாறு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன என ஆய்வு செய்து அதேபோல் இந்த மருத்துவமனை கட்டப்பட்டது. 300 படுக்கை வசதியுடன் 15 வார்டுகள்ம், மூன்று அறுவை சிகிச்சைரங்குகளுடன் நவீன மருத்துவமனையாக இது உருவானது.

இந்த நிலையில்தான் குஜராத்தில்  கேசுபாய் படலுக்கு பதிலாக  நந்ரேந்திர மோடி முதல்வரானார். அவர் பொறுப்புக்கு வந்ததும், “கட்ச் மருத்துவமனையைப் பராமரிக்க ஆண்டுக்கு 15 கோடி செலவாகிறது. ஆகவே  மத்திய நலத்துறையே, அந்த மருத்துவமனையை நிர்வகிக்க வேண்டும்” என்று கடிதம் எழுதியது மாநில அரசு.

தவிர, வடக்கு குஜராத்தில் படான் பகுதிதான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் தகுந்த இடம் என்று அறிவித்த மோடியின் (குஜராத்) அரசு,  கட்ச் மருத்துவமனையைப் புறக்கணித்தது.

அதுமட்டுமல்ல..2009ல் குஜராத் சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவற்றி கட்ச் மருத்துவமனை  அமைந்திருக்கும் இடம் உட்பட ஏராளமான நிலங்களை 99 ஆண்டு குத்தகைக்கு அதானியின் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்டது. மோடியின் நெருங்கிய நண்பர் அதானி என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.

ஆக, பிரதமர் நிவாரணநிதியிலிருந்து ₹ 100 கோடிக்கு கட்டப் பட்ட அரசு மருத்துவமனை இப்போது அதானியின் (தனியார்)  மருத்துவ நிறுவனத்துக்கு (GAIMS)  சொந்தமாகிவிட்டது

மோடியின்  இந்த மக்கள் விரோத முடிவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில்  பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அங்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது  இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் , “மேற்கு மண்டல எய்ம்ஸ் மருத்துவமனை குஜராத்தில் அமையும்” என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.  அம்மாநிலத்தின் வதேரா மற்றும் ராஜ்கோட் நகரங்கள் இந்த மருத்துவமனையை தங்கள் நகரில் துவக்க வேண்டும் என்று போட்டியிட்டுக்கொண்டிருக்கின்றன.

குஜராத்தின் முன்னாள் முதல்வர் ஆன்ந்திபென் பட்டேல் வதோதராவிற்கும், தற்போதைய முதல்வர் விஜய் ரூபானி தனது சொந்த ஊரான ராஜ்கோட் டிற்கும் வர வேண்டும் எனக் கோரி வருகின்றார்.

மொத்தத்தில் நூறு கோடிக்கும் மேல் மக்கள் பணம் செலவிடப்பட்டு உருவாக்கப்பட்ட கட்ச் மருத்துவமனை, அதானிக்கு வாரிக்கொடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் சோகம்.