மிர்யாங்,

தென் கொரியாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 33 பேர் பலியானதாக வும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தென் கொரியா நாட்டில் தென்கிழக்கு பகுதியில் சுமார் 270 கிலோ மீட்டர் தொலைவில்  அமைத்துள்ள மிர்யாங் நகரில் செஜாங் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளது.

வயோதிகர்களுக்காக பிரத்யேகமாக செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படகிறது. 35க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களும் இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு திடீரென செஜாங் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு அறைக்குள் தீப்பிடித்தது. இது உடடினயாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து  மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீவிபத்தில் முதியோர்கள் சுமார் 33 பேர் இதுவரை பலியாகி இருப்பதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டு மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த மருத்துவமனை கடந்த 2008ம்  ஆண்டுதான் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.