காஜியாபாத்:

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க, தனியார் மருத்துவமனைகள் பணம் கேட்பதால், இத்திட்டம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு உயர் சிகிச்சை இலவசமாக அளிக்கும் வகையில் பிரதமர் மோடி ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தார்.

ஆனால் இந்தத் திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுக்கின்றன.

மேற்கு உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பன்சால் என்பவர் இதய அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்ந்தார்.
அவருக்கு, பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டின் படி சிகிச்சையளிக்க அந்த மருத்துவமனை மறுத்துவிட்டது.

அவரிடம் அறுவை சிகிச்சைக்கு பணம் கட்டுமாறு கூறியுள்ளனர்.
மளிகை கடை ஒன்றில் உதவியாளராக ரூ. 7 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றும் தன்னால், அவ்வளவு தொகையை கட்ட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியவில்லை. இருக்கும் வரை இருதய நோயோடு வாழ்ந்துவிட்டுப் போகிறேன் என்று அவர் கூறுகிறார்.

இவர் நிலைமைதான் நாடு முழுவதும் உள்ளது.

ஏற்கனவே, பல மாநில அரசுகள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் நிலையில், ஆயுஷ்மான் பரத் மருத்துவ காப்பீடு திட்டம் தோல்வி அடைந்ததற்கு சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் கூறப்படுகிறது.

இந்நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சைக்கு பணம் கேட்பதால், மேற்கு உத்திரப்பிரதேச மக்கள் கொந்தளித்துள்ளனர்.

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே சிரமப்படும் தங்களால், இலவச சிகிச்சை எப்படி தர முடியும் என்று கேட்கின்றன அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்.