மத்திய பிரதேசம்: ஆபாச படம் பார்க்கச் சொல்லி 6 மாதம் பாலியல் பலாத்காரம்…மகளிர் விடுதி இயக்குனர் மீது 4வது பெண் புகார்

போபால்:

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள மகளிர் விடுதியில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதன் இயக்குனர் அஸ்வினி சர்மா கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 3 பெண்கள் புகார் அளித்திருந்த நிலையில் தற்போது 4வது பெண் ஒருவரும் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அந்த பெண் இந்தூர் போலீசாரிடம் கூறுகையில்,‘‘ என்னை அவரது கட்டுப்பாட்டில் வைத்து ஆபாச படங்களை பார்க்க கட்டாயப்படுத்தினார். 6 மாதங்கள் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அவரது தேவைகளை நான் செய்ய மறுத்ததால் என்னை அடித்தார்’’ என்று தெரிவித்துள்ளார்.

‘‘இந்த வழக்கின் விசாரணை தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் விபரங்களை அனுப்பிவைக்குமாறு இந்தூர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று போபால் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷோபா ஓசா ஒரு வீடியோவை வெளியிட்டு கூறுகையில்,‘‘அஸ்வினி சர்மா ஆர்எஸ்எஸ் ஆதரவாளர். முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் ஆதரவு அவருக்கு உள்ளது. இந்த வீடியோவில் முதல்வருடன் அஸ்வினி நெருக்கமாக உள்ளார்’’ என்றார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்த பாஜக செய்தி தொடர்பாளர் ராகுல் கோத்தாரி கூறுகையில்,‘‘ இது போன்ற சம்பவங்களை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து மகளிர் விடுதிகளை மாதந்தோறும் ஆய்வு செய்ய மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி