சென்னை :

மிழக சட்டமன்றத்தில் ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு  தாக்கல் செய்யப்பட்டது. இதன் காரணமாக இரு நகராட்சிகளும் மாநகராட்சிகளாக  மாறுகின்றன.

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அதற்காக சட்ட திருத்த மசோதாவை இன்று தாக்கல் செய்தார்.

வேலுமணி

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. தற்போது பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 12 மாநகராட்சிகள்  செயல்பட்டு வரும் நிலையில், புதிதாக 2 மாநகராட்சிகளை தமிழக அரசு உருவாக்க முடிவு செய்து அதற்கான சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்  ஆகியன மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.

இதுகுறித்து மசோதாக்களில் கூறப்பட்டிருப்பதாவது,
நாகர்கோவில் மாநகராட்சி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, மறுவரையறை ஆணையத்தால் செய்யப்படும் எல்லை வரையறைப் பணிகள் முடிவடைந்த பிறகு, நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்காக அரசானது தேவைப்படும் மாற்றமை வுகளுடன் கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டத்தின் வரைமுறைகளைத் தழுவி ஒரு சிறப்புச் சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தின் வாயிலாக நாகர்கோவில் மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

ஒசூர் மாநகராட்சி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, மக்கள் தொகை அதிகரித்தல், ஆண்டு வருமானத்தில் முன்னேற்றம், ஒசூர் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு ஓசூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் சிறப்புச் சட்டம் இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில் ஒசூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

சிறப்பு-தேர்வு நிலை:

தமிழகத்தில் மொத்தம் 152 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகள் அவற்றின் தன்மைக்கு ஏற்ப தேர்வு நிலை, சிறப்பு நிலை என்ற அளவில் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாகர்கோவில் நகராட்சி, சிறப்பு நிலை நகராட்சியாகவும், ஒசூர் நகராட்சி, தேர்வு நிலை நகராட்சியாகவும் உள்ளன.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒசூர் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 821 ஆக உள்ளது. 59 ஆயிரத்து 351 ஆண்களும், 57 ஆயிரத்து 470 பெண்களும் உள்ளனர். எழுத்தறிவு பெற்றோரின் சதவீதம் 87.40 சதவீதமாக உள்ளது.

நாகர்கோவில் நகராட்சியில் மொத்த மக்கள் தொகையின் அளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 849 ஆக உள்ளது. அதில், ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர். பெண்கள் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 911 பேரும், ஆண்கள் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 938 பேரும் உள்ளனர்.

இதில் படித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 361 உள்ளது. எழுத்தறிவு பெற்றோரின் சதவீதம் 94.99 சதவீதமாக உள்ளது. ஆண்கள் 96.63 சதவீதம் பேரும், பெண்களில் 93.43 சதவீதம் பேரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

மாநகராட்சிகள் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

தமிழகத்தில் மிகவும் பாரம்பரியமான சென்னை மாநகராட்சி உள்பட மொத்தம் 12 மாநகராட்சிகள் உள்ளன. சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட புதிய சட்ட மசோதாவின்படி, மாநகராட்சிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர உள்ளது.

சென்னை (200 வார்டுகள்), கோயம்புத்தூர் (100 வார்டுகள்), மதுரை (100 வார்டுகள்), திருச்சி (65 வார்டுகள்), சேலம் (60 வார்டுகள்), திருநெல்வேலி (55 வார்டுகள்), தூத்துக்குடி (60 வார்டுகள்), திருப்பூர் (60 வார்டுகள்), ஈரோடு (60 வார்டுகள்), வேலூர் 60 வார்டுகள்), தஞ்சாவூர் (62 வார்டுகள்), திண்டுக்கல் (51 வார்டுகள்) ஆகிய மாநகராட்சிகள் ஏற்கெனவே உள்ளன.

இந்த மாநகராட்சிகளின் பட்டியலில் ஒசூரும், நாகர்கோவிலும் இணைய உள்ளன.