ஓசூர் ஆணவப்படுகொலை: நந்தீஷ் அனுப்பிய கடைசி எஸ்.எம்.எஸ்.

ணவப்படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ், கொல்லப்படுவதற்கு முன் தன்  சக ஊழியருக்கு “அண்ணா நான் கனகபுராவில் கடத்தப்பட்டேன்”  என குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்திருக்கிறது.

ஒசூர் அருகேயுள்ள சூடகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நந்தீஷ் – சுவாதி. இவர்கள் இருவரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்திருக்கின்றனர். இருவரும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு சுவாதி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த வருடம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி  திருமணம் செய்து கொண்டு ஒசூர் ராம்நகரில் தனியாக வாடகை எடுத்து  வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 10ம் தேதி முதல் நந்தீஷ் மற்றும் சுவாதி இருவரையும் காணவில்லை.

தகவல் அறிந்த நந்தீஷின் தம்பி சங்கர் இது குறித்து ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் பெலகவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவேரி ஆற்றுப் பகுதியில்  நந்தீஷ் சுவாதி இருவரும் கை கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை பெண்ணின் உறவினர்கள் கடத்தி சென்று ஆவணக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து   பெண்ணின் தந்தை உட்பட 6 பேரை  காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் சூடகொண்டப்பள்ளி கிராமத்தில் இருபதுக்கும் மேற்பட்ட  காவலர்கள்   பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ்,  தான் இறப்பதற்கு முன்பு தன்னுடன் பணிபுரிந்த ஒருவருக்கு, “அண்ணா நான் கனகபுராவில் கடத்தப்பட்டுள்ளேன்”  என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து சக பணியாளர் சஞ்சய் பட்டேல், “நான் நவம்பர் 9 ஆம் தேதி இரவு 8 மணிக்கு வழக்கம்போல் கடையில் வேலை முடித்து வீட்டிற்கு சென்றேன். இரவு தூங்கி விட்டு காலை செல்போனை எடுத்து பார்த்தேன். அப்போது அதிகாலை 2 மணியளவில் நந்தீஷிடம் இருந்து எனக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது. அதில், அண்ணா நான் கனகபுராவில் கடத்தப்பட்டேன் என கூறியிருந்தான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#hosur #honourkilling #SMS #Nandish