சென்னை: 13 மாணவர்களின் மரணத்துக்கு தி.மு.க. தான் காரணம், திமுக கொண்டு வந்த நீட் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்.

தமிழக சட்டமன்றத்தின் 2வது நாள் கூட்டத்தொடரான இன்று கேள்வி நேரம் முடிந்ததும், இன்றைய பூஜ்ய நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.  அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், நீட் தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் சரமாரியாக எழுப்பினார்.

இதே பிரச்சினை குறித்து காங்கிரஸ், இந்திய முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து இருந்தார்கள். இவை அனைத்தையும் தகவல் கோரும் வகையில் எடுத்துக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

இது தொடர்பான விவாதத்தில் அண்ணா தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. இன்பதுரை கலந்துகொண்டு பேசினார். அப்போது,    நீட் தேர்வு வந்ததற்கு தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் காரணம். 21.10.2010–ம் தேதியன்று தான் மத்திய ஆட்சி நீட் தேர்வை கொண்டு வந்தது என்று இன்பதுரை கூறினார்.

அப்போது மு.க. ஸ்டாலின் எழுந்து, நீட் தேர்வை நாங்கள் எதிர்க்கவில்லை. கருணாநிதி ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு வரவில்லை என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய இன்பதுரை, நீட் தேர்வுக்கு  ஆதரவாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்தானே உச்சநீதிமன்றத்தில் வாதாடி, தமிழகத்துக்கு எதிரான தீர்ப்பை பெற்றுக்கொடுத்தார் என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து இன்பதுரை பேசினார். வரலாற்றை திரிக்கவோ, மறைக்கவோ முடியாது. காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி இருந்த போது தான் நீட் சட்டம் வந்தது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் பல வழக்குகள் போடப்பட்டு நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. ஆனால் இதனை எதிர்த்து காங்கிரஸ் மறு ஆய்வு மனு போட்டார்கள்.

அப்போது நீங்கள் பார்லிமெண்டில் அமைதியாக இருந்தீர்கள். வரலாற்று பிழையை செய்தீர்கள். மாணவர்கள் வாழ்க்கையுடன் விளையாடாதீர்கள்.

19.7.2012 அன்று நமக்கு எதிராக தீர்ப்பு வந்தபோது மக்களவையில் தி.மு.க. உறுப்பினர்கள் இல்லை. அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் இருந்தார்கள். அப்போது அவர்கள் வெளிநடப்பு செய்தார்கள். ஆனால் ராஜ்ய சபையில் இந்த சட்டம் குறித்து விவாதம் வந்தபோது அங்கு 3 தி.மு.க. உறுப்பினர்கள் இருந்தீர்கள். ஆனால் அதனை நீங்கள் எதிர்க்கவில்லை, வெளிநடப்பும் செய்யவில்லை.

இன்று மாணவர்களின் கல்லறை மீது ஏறி நின்று அரசியல் செய்கிறீர்கள். முழுக்க முழுக்க தி.மு.க. ஆதரவுடன் தான் நீட் தேர்வை காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்தது.

நீட் தேர்வுக்கு எதிராக அம்மா எப்படி எல்லாம் செயல்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். நீட் தேர்வுக்கு அம்மா தமிழகத்தில் விலக்கு கேட்டார். இதற்கு அட்டர்னி ஜெனரலும் சாதகமாக கருத்து தெரிவித்தார். ஆனால் சுகாதாரத்துறைக்கு போனபோது அவர்கள் இதனை ஏற்கவில்லை.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால் அப்போது நீட் தேர்வுக்கு ஆதரவாக காங்கிரசில் மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் வாதாடினார்.

மாணவர்கள் மத்தியில் இப்போது எடப்பாடி அலை வீசுவதால் நீங்கள் இப்போது ஏதேதோ பேசுகிறீர்கள். உள்ளே ஒன்று பேசுகிறீர்கள். வெளியே ஒன்று பேசுகிறீர்கள் என்று கூறிய இன்பதுரை ஒரு வார்த்தையை குறிப்பிட்டார்.

உடனே தி.மு.க.வினர் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினார்கள். பின்னர் அந்த வார்த்தையை சபை குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார்.

நளினி சிதம்பரம் குறித்த கூறியதற்கு கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் மையப்பகுதியில் கூடி முழக்கமிட்டனர். சபாநாயகர் இருக்கைக்கு முன் வந்தார்கள். நீண்ட நேரம் சபாநாயகருடன் வாக்குவாதம் செய்தார்கள். பலமுறை சபாநாயகர் கேட்டுக்கொண்டும் இருக்கைக்கு செல்லாமல் அங்கேயே நின்றுகொண்டு வாதாடினார்கள்

இதையடுத்து, அவையில் இருந்து காங்கிரஸ் சட்டமன்ற  உறுப்பினர்கள் வெளியேற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். சபாநாயகர் உத்தரவையடுத்து அவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பி னர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறுக்கிட்டு பேசினார். அப்போது, நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் அவர் (நளினி) ஆஜர் ஆனாரா? இல்லையா? நடந்தது உண்மையா? இல்லையா? என்று கூறினார்.

ஸ்டாலின் எழுந்து நீட் தேர்வை தமிழகத்திற்கு நுழையாமல் தடுப்பது தி.மு.க. ஆட்சி தான். உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டது தி.மு.க. தான். மத்திய கூட்டணி ஆட்சியில் தி.மு.க. இருந்தது. ஆனால் இங்கு நுழைவுத்தேர்வு வரவில்லை. ஆனால் அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தான் நீட் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது என்று கூறினார்.

தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அபுபக்கர் பேசினார்.

இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பதில் கூறினார்.

தவறான தகவல்களை பதிவு செய்யாதீர்கள். நீட் தேர்வு எப்போது இந்தியாவுக்குள் நுழைந்தது. அப்போது யார் ஆட்சியில் இருந்தது என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுந்து ஆவசேமாக  பேசினார்.

நீட் தேர்வு மத்தியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி இருந்த போது தான் கொண்டு வரப்பட்டது. இதனை மறுக்க முடியுமா? நீட் தேர்வை யார் அறிமுகம் செய்தது? இது எல்லோருக்கும் தெரியும்.

அகில இந்திய அளவில் இந்த தேர்வை கொண்டு வந்தீர்கள். அம்மா தான் உச்சநீதிமன்றத்திற்கு சென்று தமிழகத்திற்கு விலக்கு பெற வாதாடினார். நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

மீண்டும் கொண்டு வந்தது யார்? அவர் (நளினி) உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடினார். இதனை மறுக்க முடியுமா? குட்டிச்சுவராக்கி விட்டீர்கள்.

நீட் தேர்வை பற்றி இப்போது பேசுகிறீர்கள். நீட் தேர்வால் 13 மாணவர்கள் மரணத்திற்கு தி.மு.க. தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பாக காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன.