ஐதராபாத்:

ஐதராபாத்தில் தனியாக வந்த பெண் ஒருவருக்கு ஏற்கனவே முன்பதிவு செய்த அறையை தர மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவை சேர்ந்த நூபுர் சரஸ்வத் (வயது 23) என்ற பெண் சுற்றுசூழல் துறை என்ஜினியர். மேலும், கவிதை எழுதி பிரபலமானவர். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் ஐதராபாத் சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் ஏற்கனவே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த அறையை கேட்டுள்ளார்.

அதற்கு ஓட்டல் நிர்வாகம் தனியாக வந்த பெண்ணுக்கு அறை தர மறுத்துள்ளது. இது குறித்து நூபுர் பேஸ்புக் பக்கத்தில், ” தற்போது ஐதராபாத் ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருக்கிறேன். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தும் அந்த ஓட்டலில் தங்க என்னை அறை வழங்கவில்லை.

இதற்கு காரணம், நான் தனியாக வந்தது தான். அந்த ஓட்டலில் தங்குவதை விட, தெருக்களில் நான் தங்கும் போது பாதுகாப்பாக இருப்பேன் என அவர்கள் கருதுகின்றனர்’’ என குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தை, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர்.

அந்த ஓட்டலின் நிபந்தனைகளை நூபுர் போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டுள்ளார். ‘‘உள்ளூர் மக்கள், தனியாக வரும் பெண்கள், திருமணமாகாத ஜோடிகளுக்கு அனுமதி இல்லை’’ என அந்த நிபந்தனையில் கூறப்பட்டுள்ளது.