புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய ஓட்டல் நிறுவனங்கள், கடந்த நிதியாண்டில் சுமார் 65% அளவுக்கு வருவாய் இழப்பை காணக்கூடும் என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

தர நிர்ணய நிறுவனமான ‘இக்ரா’ இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது; கடந்தாண்டு கொரோனா பரவலால் பயணங்கள், தங்குவது ஆகியவை சுருங்கிய காரணத்தால், நிறுவனங்கள் கடுமையான வருவாய் இழைப்பை சந்திக்கக்கூடும்.

செலவினங்களை கடுமையாக குறைக்க நிறுவனங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், கடந்த 4 ஆண்டுகளின் ஒட்டுமொத்த லாபத்தை துடைத்துவிடும் அளவுக்கு, நிகர இழப்புகளை சந்திக்க நேரிடும். நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதியில், நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், கொரோனா பரவல், உலகம் முழுக்க மீண்டும் அதிகரித்துவிட்ட சூழ்நிலையில், அவை வளர்ச்சிக்கு தடையாக அமைந்து விடும் நிலை உள்ளது. தடுப்பூசி போடப்பட்டு வருவது சிறிது நம்பிக்கை தருவதாக இருக்கிறது.

இருப்பினும், கொரோனாவுக்கு முந்தைய நிலையை இத்துறை நிறுவனங்கள் எட்டுவதற்கு இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை ஆகுமென்று கூறப்பட்டுள்ளது.