பிரிட்டன் அரசக் குடும்பத்தில் வேலைக்கு சேர ஆசையா? – சம்பளம் ரூ.18.5 லட்சம்!

லண்டன்: இங்கிலாந்தின் அரசக் குடும்பத்தினருக்கு வீட்டுப் பணியாளர் வேலைக்கான ஆள் தேவைப்படுவதாக அதிகாரப்பூர்வ அரசக் குடும்பத்து வலைதளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு ஆரம்ப சம்பளமாக ரூ.18.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நிலை 2 அப்ரன்டிஸ் பணியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் விண்ட்ஸர் கோட்டையில் வசிக்க வேண்டியிருக்கும்.

இந்தப் பணியில் தேர்வு செய்யப்படுபவர் வாரத்திற்கு 5 நாட்கள் பணிசெய்ய வேண்டும். தங்குவதற்கான இடம் வழங்கப்படுவதோடு, அதுதொடர்பான சம்பளப் பிடித்தமும் உண்டு. அரண்மனையிலிருந்தே உணவு வழங்கப்படும். அதேசமயம், இந்த சம்பளத்தில் பயணப் படியும் உள்ளடக்கம்.

இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர், ஆண்டு முழுவதும் அரச குடும்பத்தினரின் தங்குமிடங்களுக்கு பயணம் செய்ய வேண்டியதிருக்கும். அதில் பக்கிங்ஹாம் அரண்மனையும் அடக்கம்.

இந்தப் பணியில் ஆண்டுக்கு 33 நாட்கள் (வங்கி விடுமுறை நாட்கள் உட்பட) விடுமுறை உண்டு. அதேசமயம், இந்தப் பணிக்கு ஆங்கிலம் & கணிதத்தில் தகுதிபெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இந்த வேலையில், அரண்மனைகளின் உட்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். இப்பணிக்காக 13 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.