சீராகும் நிலைமை – சென்னையில் மீண்டும் உயரும் வீட்டு வாடகை!

சென்னை: கொரோனா தீவிரம் காரணமாக, சென்னையில் சரிந்திருந்த வீட்டு வாடகை, தற்போது மெதுவாக ஏற்றம் கண்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் 50% அளவிற்கு சரிந்த வாடகை, தற்போது 20% அளவிற்கு சரிவில் உள்ளது. அதாவது, கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் இருந்ததைவிட 20% குறைவாக உள்ளது.

தென்சென்னை மற்றும் சென்னையின் மேற்கு சுற்றுப்புறங்களில் வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரித்த நிலையில், பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் ராஜிவ் காந்தி சாலையை ஒட்டியப் பகுதிகளில், பழைய நிலை இன்னும் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களைப் பெறுவதில் ஆர்வம் காட்டியதால், கடந்த மாதம் முதல் வாடகைத் தொகையில் சரிவு ஏற்பட்டது.

கடந்த 2019ம் ஆண்டின் ஜூன் – செப்டம்பர் காலக்கட்டத்தை ஒப்பிடுகையில், இந்தமுறை அதேகாலக்கட்டத்தில், வீட்டு உரிமையாளர்கள் வாடகை இட விபரங்களை ஆன்லைன் போர்டலில் பட்டியலிடுவது 47% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.