ஹூஸ்டன்

பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துக் கொள்ளும் ஹவ்டி மோடி நிகழ்வு நடைபெற உள்ள ஹூஸ்டன் நகர் கடும் வெள்ளத்தில் தவித்து வருகிறது.

ஐநா சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் நடைபெற உள்ள ஹவ்டி மோடி நிகழ்வில் கலந்துக் கொள்ள உள்ளார்.   இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்.   இந்த நிகழ்வில் சுமார் 50000 முதல் 1 லட்சம் பேர் வரை கலந்துக் கொள்வார்கள் எனக் கூறப்பட்டு வந்தது.   தற்போது நிகழ்வு நடைபெறுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

டெக்ஸாஸ் மாகாணத்தில் குறிப்பாக ஹூஸ்டன் நகரில் இமெல்டா புயல் தாக்கத்தினால் விடாது கனமழை பெய்து வருகிறது.    இதனால் அந்நகர மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளது.    ஹூஸ்டன் நகரச் சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி உள்ளதால் பல கார்கள் முழுகி உள்ளன.   இந்த கார்களில் இருந்த நூற்றுக்கணக்கான மக்களைப் படகுகள் மூலம் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

இந்த கனமழை மற்றும் வெள்ளத்தினார்ல் ஹூஸ்டன நகரில் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.  ஹூஸ்டன் நகரில் உள்ள ரைஸ்லாந்து மருத்துவமனையில் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  நகரின் தென் கிழக்கு பகுதி வாசி ஒருவர் தனது குதிரையைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லும் ப் ஓது மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தார்.

எனவே தற்போது நகரில் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.   அத்துடன் எரிசக்தி ஆலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றின் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.   ஏற்கனவே இரு ஆண்டுகளுக்கு முன்பு ஹூஸ்டன் நகரில் புயல் தாக்குதலில் சுமார் 60க்கும் மேலான மக்கள் மரணம் அடைந்தனர்.  எனவே தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.   மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.