அணியில் இல்லாத ஒருவரால் மோசடி செய்ய முடியுமா? – ஜெயவர்தனே கேள்வி!

--

கொழும்பு: அணியில் இடம்பெறாத ஒருவர், எப்படி ‘‍மேட்ச் ஃபிக்ஸிங்’ மோசடியில் ஈடுபட்டிருக்க முடியும்? என்று இலங்கை முன்னாள் விளையாட்டு அமைச்சரின் குற்றச்சாட்டிற்கு எதிராக கேள்வியெழுப்பியுள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே.

கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதியில், இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி ஆடிய ஆட்டம் முன்பே முடிவுசெய்யப்பட்டது என்றும்; ஆனால் இந்தக் குற்றத்தில் அணி வீரர்கள் யாரும் ஈடுபடவில்லை என்றும் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார் இலங்கையின் அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த மகிந்தநந்தா அலுத்கமகா.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டிற்கு ஆதாரம் கேட்டிருந்தனர் முன்னாள் கேப்டன்கள் ஜெயவர்தனேவும் சங்ககாராவும். ஆனால், வீரர்கள் யாரும் தவறு செய்யவில்லை என்று தான் குறிப்பிட்ட பிறகு, எதற்காக ஆதாரம் கேட்கிறார்கள் மற்றும் இதைப் பெரிதாக்குகிறார்கள் அந்த இருவரும் என்று பதிலளித்தார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் அமைச்சரின் கருத்துக்கு இணையான கருத்தையே தெரிவித்திருந்தார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்காவும்.

இந்நிலையில், இதுகுறித்து பதிலளித்துள்ள மகிளா ஜெயவர்தனே, “2011 உலகக்கோப்பை எங்களால் விற்கப்பட்டது என்று ஒருவர் குற்றஞ்சாட்டும்போது, இயற்கையிலேயே அது ஒரு பெரிய விஷயமாக ஆகிவிடுகிறது. அணியில் இடம்பெறாத ஒருவரால், எப்படி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’ குற்றச்சாட்டில் ஈடுபட முடியும் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று பதிலளித்துள்ளார்.

இந்தப் பிரச்சினை இப்போதைக்கு முடியாது போலும் என்கின்றனர் சில கிரிக்கெட் விமர்சகர்கள்!