கத்துவா வழக்கில் பெண் அதிகாரி திறமையாக செயல்படுவாரா ? : வழக்கறிஞர் வினா

த்துவா

த்துவா பலாத்கார வழக்கில் ஒரு பெண் அதிகாரி எவ்வாறு திறமையாக செயல்படுவார் என வழக்கறிஞர் அங்குர் ஷர்மா கேள்வி எழுப்பி உள்ளார்.

காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியை சேர்ந்த இஸ்லாமிய நாடோடி வகுப்பை சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதி காணாமல் போனார்.   அவ்ரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாத காவல்துறை ஜனவரி 17ஆம் தேதி பிணமாகக் கண்டு பிடித்தார்.   அந்தச் சிறுமி கடத்தப்பட்டு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பலரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிய வந்தது.

போலிசார் விசாரணையில் அதே பகுதியில் இருந்த கோவில் அமைப்பாளரான சஞ்சிராம் மற்றும் 7 பேர் அந்த சிறுமியைக் கடத்திச் சென்று இந்த கொடூரத்தை நிகழ்த்தியதாகவும்,  அந்த இஸ்லாமிய நாடோடி வகுப்பினரை அங்கிருந்து விரட்டி அடிக்க இவ்வாறு நடந்ததாகவும் கூறப்பட்டது.   அதை ஒட்டி சஞ்சிராம், அவர் மகன் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை சிறப்புக் குழு ஒன்று விசாரித்து வருகிறது.  இந்தக்குழுவின் தலைமைப் பொறுப்பு பெண் அதிகாரியான ஸ்வேதாம்பரி சர்மாவிடம் அளிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து இந்த வழக்கின் வழக்கறிஞர் அங்குர் ஷர்மா, “ஸ்வேதாம்பரி என்பவர் யார்.  அவர் ஒரு பெண்.  ஒரு பெண் எவ்வலவு தூரம் புத்திசாலியாக இருக்க முடியும்?  அவர் எவ்வாறு திறமையாக செயல்படுவார்?” எனக் கேள்விகள் எழுப்பி உள்ளார்.

மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது பெண் அதிகாரி மிகவும் துயருற்றதாக தெரிவித்த அங்குர் ஷர்மா,  “அரசு அதிகாரிகள் என்பவர் வெறும் பொம்மைகளே.   அந்த பெண் அதிகாரிக்கு இந்த விசாரணையில் அதிகம் துயருற்றிருந்தால் அவர் ஏன் தன்னுடைய மேல் அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என்பது ஐயமாக உள்ளது.   மேலும் ஒரு பெண் அதிகாரி இவ்வளவு பெரிய குற்ற நிகழ்வில் சாட்சிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பார் என்பது சந்தேகமே” எனவும் தெரிவித்துள்ளார்.