பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாட அதிமுக அரசுக்குத் தகுதி உண்டா? : மு க ஸ்டாலின் கேள்வி 

துரை

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாட அதிமுக அரசுக்குத் தகுதி உள்ளதா என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

நேற்று மாலை மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையும் விழா நடந்தது.    இந்த விழாவில் ராஜ கண்ணப்பன் தனது அறக்கட்டளையில் இருந்து ரூ. 50 லட்சத்துக்கான காசோலையைக் கலைஞர் அறக்கட்டளைக்கு ஏழைகள் நலத்திட்டத்துக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலினிடம் வழங்கினார்.   அதன் பிறகுத் தனது பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் திமுகவில் அவர் இணைந்தார்.

இந்த விழாவில் மு க ஸ்டாலின், “ராஜ கண்ணப்பனையும், அவரோடு திமுகவில் இணைந்தவர்களையும் வரவேற்கிறேன். எடப்பாடி ஆட்சியைத் தமிழகத்தில் வேரோடும், மண்ணோடும் வீழ்த்தும் நோக்கத்தில் நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள்.  தமிழக அரசின் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தின் நிதிநிலை கோமா நிலையில் இருப்பது வெளிப்பட்டுள்ளது. அவர்களே பொருளாதார வீழ்ச்சியை ஒப்புக்கொண்டுள்ளனர்.  முன்பு 8.17 சதவீதமாக இருந்த தற்போது பொருளாதார வளர்ச்சி, 7.27 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதிமுகவினருக்கு ஆட்சி முடிவடையும் கடைசி காலகட்டத்தில், ஜெயலலிதா மீது திடீர் பாசம் வந்துள்ளது.   ஜெயலலிதாவின் பிறந்தநாளை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கொண்டாடுவோம் என முதல்வர் அறிவித்துள்ளார். அதிமுக அரசுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்  என்று கொண்டாடுவதற்குத் தகுதியோ, அருகதையோ உண்டா?

சென்ற ஆண்டு சென்னை பள்ளிக்கரணையில், துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்ற அதிமுக பிரமுகர் விழாவில், சாலையில் வைத்த பேனர் சரிந்து சுபா என்ற இளம்பெண் மீது விழுந்து, லாரி ஏறி உயிரிழந்தார்.  அவர் குடும்பத்தினருக்கு நான் நேரில் சென்று  ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினேன். ஆனால், ஆளும் அதிமுக ஆறுதலும் கூறவில்லை. நிதியும் வழங்கவில்லை.

அதைப் போல் கோவையில் அனுராதா என்ற இளம்பெண் பேனர் சரிந்து விழுந்து, ஒரு காலை இழந்தார். அதிமுகவினர் அவரை நீதிமன்றம் செல்லவிடாமல் மிரட்டி, புகார் கொடுக்கவிடாமலும் தடுத்து விட்டனர்.

இந்த ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தண்டனை கிடைப்பது இல்லை. பெண்களுக்கு எதிரான வழக்குகளில் 15.6% மட்டுமே தீர்ப்பு வந்துள்ளது. 1,073 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். 6,330 பேர் குற்றவாளிகள் இல்லை என விடுதலையாகி உள்ளனர்.

இதற்குக் காரணம் அந்த வழக்குகளை  காவல்துறை சரியான முறையில் கையாளவில்லை என்பதாகும்.  இதற்கு நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்” எனத் தன் உரையில் கூறினார்.