மும்பை: பாலில் இருந்து ஈயை பிரித்தெடுத்து வீசுவதைப்போல், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ரஹானேவை நீக்கிவிட்டனர் என்ற ஒப்புமையோடு கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா.
அவர் கூறியுள்ளதாவது, நான்காம் நிலையில் ஆடிய வீரர் என்ற முறையில், ரஹானேயின் பேட்டிங் புள்ளி விவரங்கள் நன்றாகவே உள்ளன. ஆனால், நல்ல ஸ்டிரைக் ரேட் இருக்கையிலேயே, திடீரென அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். பாலில் இருந்து எப்படி ஈயை எடுத்து தூரப்போடுவோமோ, அப்படி போட்டு விட்டனர். ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? உண்மையில் அவருக்கு நியாயம் செய்யவில்லை என்றே நான் நினைக்கிறேன்.
இங்கிலாந்து அணியைப் போன்று, ஒவ்வொரு போட்டியிலும் 350 ரன்களுக்கு நாம் இலக்கு வைக்கவில்லை. அது அவர்களுக்கு ஒத்துவரலாம். வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள் அப்படி ஆடுகிறார்கள். நாம் அப்படி ஆட முடியுமா? நாம் இன்னமும் கிரிக்கெட்டை மரபான முறையில் ஆடுபவர்கள்தான்.
இன்னிங்ஸைக் கட்டமைத்து 320-325 ரன்களை நாம் எடுக்க முடியும். அதற்கேற்ப அணியைத் தேர்வு செய்கையில், அதில் அஜிங்கிய ரஹானே அருமையாகப் பொருந்துவார்.
ஒருநாள் அணியிலிருந்து அவரை நீக்கும்போது அவர் நன்றாகத்தான் ஆடிவந்தார். நன்றாக ஆடும்போது ஒருவரை அணியிலிருந்து அகற்றுவது சரியல்ல. தென் ஆப்பிரிக்காவிலும் அவர் நன்றாகவே ஆடினார். மீண்டும் ரஹானேவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்” என்றுள்ளார் ஆகாஷ் சோப்ரா.