Random image

எப்படி இருக்கின்றன அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெ., சமாதிகள்?: ஒரு நேரடி ரிப்போர்ட்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகம் முழுதும் அ.தி.மு.க.வினர், ஜெயலலிதாவுக்கு நினைவஞ்சலி செலுத்து வருகிறார்கள்.  சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில்  அதிமுக தலைவர்கள் மரியாதை செலுத்தினர். 

இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள  அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சமாதிகள் எப்படி இருக்கின்றன என்பது குறித்து ரவி  சுந்தரம் அவர்களின் நேரடி பதிவு:

ஜெயலலிதா சமாதி.. ஏதோ ஒரு புதிய படம் ரிலிஸ் ஆகும் இடம் போல் மிகப் பெரிய அளவில் மின்சார வெளிச்சம் உண்டாக்கப்பட்டு இரும்பு தடுப்புகள் போடப்பட்டு களேபரமாக இருந்தது.

சாலையின் எதிர்புறம் கட் அவுட்கள் தாறுமாறாக வைக்கப்பட்டு இருந்தது. அந்த பக்கம் நடைபாதை சுத்தமாக மறிக்கப்பட்டு விட்டது. யாரும் கவலை கொள்ள வில்லை. ஒரு பெரும் கூட்டமாக எல்லோரும் ஏதாவது தின்று கொண்டு அல்லது அலைபேசியில் பேசி கொண்டு வந்து கொண்டு போய் கொண்டும் இருந்தனர். சாலையில் இருந்து எம்.ஜி.ஆரின். சமாதியின் ஊடாக போய்தான் ஜெயாவின் சமாதியை அடைய வேண்டும். எல்லோரும் அப்படித்தான் சென்றார்கள். \எம்.ஜி.ஆர் சமாதி கொஞ்சம் இருட்டாக கிட்டத்தட்ட ஒரு இளைப்பாறும் மேடைப்போல் எல்லோராலும் நெருங்க கூடிய அளவில் இருந்தது. அந்த மேடை மிது பூக்களும் ஒரு அணையாத விளக்கும் இல்லையென்றால் ஏதாவது ஒரு குடிகாரன் காற்றாட படுத்து தூங்கிவிடும் சாத்தியம் அதிகம். அருகில் இருந்த காவலர்களும் அதிகமாக கவலை படவில்லை.

இதை தாண்டி ஜெயாவின் சமாதி. மேலே ஒரு தகர கொட்டகை. உள்ளே பூக்களால் அலங்கரிக்கப் பட்ட சமாதி. நிரம்ப வெளிச்சம் இருந்தது. அருகில் ஒரு மிகப்பெரிய ப்ளெக்ஸ் போர்டில் அந்தம்மாவின் கடைசி கால படம் வைக்கப்பட்டிருந்தது. அதை தாண்டி ஒரு செயற்கை நீர் ஊற்று / அருவி (இரண்டுங்கெட்டான் ) காணப்பட்டது. ஒரு கும்பல் அங்கு நுழைய பார்த்து போலீசிடம் திட்டு வாங்கியது.

பல வித மொழி பேசும் மக்கள் ஒரு வித வேடிக்கை பார்க்கும் மனதிலேயே சுற்றி வந்தனர். வெளியூரிலிருந்து வந்திருந்த ஆண்கள் பலரின் சுவாசத்தில் சாராயம் மணத்தது. இளைஞ்ர்களும் யுவதிகளும் தவறாமல் செல்பி எடுத்து கொண்டனர். ஏழைகளின் கிராமத்து பெண்களின் பேச்சில் ஒரு வியப்பு மற்றும் பரிதாபமே மேலிட்டது.

ஜெ.திபா வந்திருந்தார். ஒரு பத்து பேர் கீரி பாம்பு சண்டை காட்ட வந்த மோடி மஸ்தானை பார்க்கும் மனநிலையில் அவரை வேடிக்கை பார்த்தனர். அவர்கள் குரலிலும் மரியாதை இல்லை. காவலுக்கு இருந்த அனைத்து காவலரும் (ஆண் /பெண்) தவறாமல் மொபைலில் பேசிய வண்ணமே இருந்தனர்.

மிக அதிகமான காவலர் வாகனங்கள் அங்கு குவிக்கப்பட்டிருந்தன. சென்னையில் குற்றங்கள் ஏன் இத்தனை அதிகம் நடக்கின்றன என்று புரிந்தது. இன்ஸ்பெக்டர் முதல் துணை கமிஷனர்கள் வரை வெட்டியாக பேப்பர் படித்து கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தனர்.

WORST ABUSE OF GOVERNMENT RESOURCES ! ATROCIOUS! நிறைய நாய்கள் மக்கள் போடும் பஜ்ஜியின் மிச்சதிற்காக அலைந்து கொண்டிருந்தன. சுற்றி முடித்து வெளியே வந்த போது சென்னையின் இன்னொரு சத்தமான குப்பைகள் சேரும் இடத்தை கடக்கும் போது இருக்கும் மனநிலையிலேயே இருந்தேன்.

அடுத்து அண்ணா சமாதியை கடந்தேன். இருட்டாக யாருமே இல்லாமல் அம்போ என்று இருந்தது.

அண்ணா நாமம் வாழ்க.!!