பெங்களூரு

ர்நாடக மாநிலத்தில் 105 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் பாஜக எவ்வாறு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்கும் என சித்தராமையா கேட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.   இந்த இரு கட்சிகளையும் சேர்ந்த 16 உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் ஆட்சி பெரும்பான்மையை இழந்தது.  நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன.  முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்தார்.

பாஜக இன்று மீண்டும் ஆட்சியை அமைக்க உள்ளது   பாஜகவின் தலைவர் எடியூரப்பா இன்று மாலை கர்நாடக முதல்வராக 4 ஆம் முறையாக பதவி ஏற்க உள்ளார்.   அவருக்குப் பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா தனது டிவிட்டரில், “கர்நாடகா மாநிலத்தில் 105 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் பாஜக எவ்வாறு ஆட்சி அமைத்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்?  இது மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவானதாகும்.  அரசியலமைப்பு சட்டம் பின்பற்றப்பட்டால் பாஜக எவ்வகையிலும் ஆட்சி அமைக்க முடியாது.   இது ஜனநாயகத்தின் மீது பாஜக கொண்டுள்ள அவநம்பிக்கையைக் காட்டுகிறது” என பதிந்துள்ளார்.