Random image

தேர்தல் சமயத்தில் கருப்பு பண புழக்கம் அதிகரிப்பது எப்படி?…..ப.சிதம்பரம் கேள்வி

டில்லி :

தேர்தல் சமயத்தில் கருப்பு பண புழக்கம் அதிகரிப்பது எப்படி? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஐதராபாத்தில் கூறுகையில், ‘‘டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம். இந்த விலை உயர்வினால் மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. இதற்கான தீர்வை கண்டறிந்து பெட்ரோல், டீசல் விலையை அரசு விரைவில் குறைக்கும்’’ என்றார்.

இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில்,‘‘ இலவசமாக கச்சா எண்ணெயை பெறுவதற்கான வழிகளை பாஜக கண்டறிய வேண்டும். அதன்பிறகு தான் உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியும். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்றவற்றால் கருப்பு பணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.

ஆனால், தேர்தல் சமயத்தில் புழங்கும் கருப்பு பணத்தால் ஜனநாயகத்திற்கே ஆபத்து ஏற்படுகிறது என தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். அப்படியெனில் மத்திய அரசு ஒழித்து விட்டதாக கூறும் கருப்பு பணம் எப்படி வந்தது?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.