கர்நாடகா சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பது எப்படி?

பெங்களூரு:

ரபரப்பான கர்நாடக அரசியல் சூழ்நிலையில், நாளை மாலை முதல்வர் எடியூரப்பா, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி  பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, சட்டமன்றத்தில் ஒரு மாதிரியும், நாடாளுமன்றத்தில் வேறு மாதிரியும் வாக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், கர்நாடகாவில் நாளை வாக்கெடுப்பு எப்படி நடைபெறப் போகிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

மாநிலத்தில் அதிகமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வான மூத்த உறுப்பினர் ஒருவரை சட்டப்பேரவை செயலாளர் தேர்வு செய்வார். அவரை சட்டமன்றத்தின் இடைக்கால சபாநாயகராக சட்டப்பேரவை செயலாளர் முன்மொழிவுடன் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

(ஆனால், கர்நாடகாவில் ஏற்கனவே  தற்காலிக சபாநாயகராக  8 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப் பட்ட தேஸ்பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்)

 

அதைத்தொடர்ந்து,  எம்.எல்.ஏக்கள் அனைவரும் உறுதி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்புவிடுக்குமாறு இடைக்கால சபாநாயகர் சட்டப்பேரவை செயலரை கோருவார். அதைத்தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் பதவி ஏற்றுக்கொள்வர்.

அதைத்தொடர்ந்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் சபையில் உரையாற்றுவர். இறுதியில், நம்பிக்கை வாக்கு கோரி முதல்வர் உரை நிகழ்த்துவார்.

இதற்கிடையில், புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற வாய்ப்பு உண்டு. இவை அனைத்தும் முடிந்தபிறகுதான்சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்த முன்வருவார்.

அதையொட்டி சபையில் அனைத்து கதவுகளும் மூடப்படும். பின்னர் குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும். தேவைப்படின்,  ஆதரவு மற்றும் எதிர் தரப்பினர் தங்கள் வாக்குகளை தனித்தனியாகவும் வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்படலாம்.

இதில் கிடைக்கும் வாக்குகளை வைத்தே  நம்பிக்கை கோரிய அரசு வெற்றி பெற்றதா அல்லது தோல்வி அடைந்ததா என்பது குறித்து சபாநாயகர் அறிவிப்பார்.

You may have missed