மத்தியில் ஆளும் கட்சியின் தேசிய செயலாளரான ஹெச்.ராஜாவை எப்படி கைது செய்ய முடியும்?….அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

சென்னை:

மத்தியில் ஆளும் பாஜக.வின் தேசிய செயலாளராக உள்ள ஹெச்.ராஜாவை எப்படி கைது செய்ய முடியும்? என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்த கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன் நடிகர் எஸ்.வி.சேகர் முகநூலில் பத்திரிகைத்துறை பெண்கள் குறித்து அவதூறாகப் பதிவு செய்திருந்தார். அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் கைது செய்யப்படவில்லை. இதேபோல் விநாயகர் சதுர்த்தி விழாவில் பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தையும், காவல் துறையையும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீசார் அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 2 தனிப்படைகள் அமைத்தும் ராஜாவை கைது செய்யவில்லை. இந்நிலையில் கடந்த 16-ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்எல்ஏ கருணாஸ் போலீசாரையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தனியார் செய்தி சேனலில் இது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் கூறுகையில், ‘‘ஹெச்.ராஜா யாரு? பாஜக தேசியச் செயலாளர். தேசியச் செயலாளர் என்றால் 29 மாநிலங்களில் ஆட்சி நடத்தும், இந்தியா முழுவதும் ஆட்சி செய்யும், மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் ஆட்சி நடத்தும் வலிமை வாய்ந்த பாஜகவின் அகில இந்திய அளவிலான தேசியத் தலைவர்களில் ஹெச்.ராஜாவும் ஒருவர்.

அவரும் கருணாஸும் ஒன்றா?. கருணாஸ் அதிர்ஷ்டத்தால் பதவிக்கு வந்து ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும் சாதாரண நபர். அவரையும் ராஜாவையும் ஒப்பிட முடியுமா?’’ என்று பதிலளித்தார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

You may have missed