வெளிநாட்டு டெக்னாலஜி 0 உள்நாட்டு டெக்னாலஜி (!)

டந்த வாரம்  சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரு சரக்கு கப்பல்கள் மோதியதில், கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்து வருகின்றன.   மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியவில்லை.

இந்த கசிவு என்பது மிகப்பெரிய செயற்கை பேரிடர் என்று பலரும் பதறிக்கொண்டிருக்க.. அரசோ, வாளிகளைக் கொண்டு கசிவுகளை அள்ளி வருகிறது.

எண்ணூரில்..

இது தொடர்பாக, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட, ‘இந்த விபத்து தொடர்பாக, இரு கப்பல் நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும். மேலும், மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக அதிவ நவீன தொழில் நுட்ப கருவிகளை பயன்படுத்தி, எண்ணெய் படலங்களை வேகமாக அகற்ற வேண்டும்’ என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சரி, இந்த கசிவை எப்படி நீக்குவது என்று, துறைமுக மற்றும் கப்பல் பணியில் உள்ளவர்கள், சுற்றுப்புற ஆர்வர்கள், அரசு அதிகாரிகள் என பல தரப்பினரையும் தொடர்புகொண்டு விசாரித்தோம்.

மயில்வாகனன்

கடந்த 2009 முதல் எட்டு வருடங்களாக சிங்கப்பூர் துறைமுகத்தில் லேசிங் பிரிவில் பணியாற்றி வருபவர் துறையூர் மயில்வாகன். இவரை தொடர்புகொண்டு பேசினோம்.

அவர், “ எண்ணூரில் நடந்த கப்பல் விபத்துக்கான காரணமாக சொல்லப்படுவதே நம்பும்படியாக இல்லை. அதாவது பனிமூட்டம் காரணமாக கப்பல்கள் மோதின என்று தகவல் வருகிறது.  ஆனால் கப்பல்கள் போக்குவரத்து சீராக அமைய தற்போது GPS தொழில்நுட்பம் இருக்கிறது.  பிறகு எப்படி பனிமூட்டத்தால் விபத்து என்று சொல்கிறார்களோ தெரியவில்லை.

பொதுவாக வெளிநாடுகளில், நமது விமான நிலைய கட்டுபாட்டு அறையை போன்றே கப்பல்களும் கட்டுபாட்டு அறையின் தகவல்களை பெற்றே கிளம்பும். உதாரணமாக ( நான் பணியாற்றும்) சிங்கப்பூர் துறைமுகத்தில் எந்தநாட்டு கப்பல்களாக இருந்தாலும், சிங்கப்பூர் துறைமுகத்தில் உள்ளே நுழைவதாக இருந்தாலும், வெளியேறுவதாக இருந்தாலும் சரி, சிங்கப்பூர் பைலட் தான் கப்பலை வழிநடத்துவார்.  அந்த கப்பல் கேப்டன் சிங்கப்பூர் பைலட்டின் உத்தரவுகளை தனது ஊழியர்களுக்கு தெரிவிப்பார்.. சிங்கப்பூர் எல்லை வந்ததும், பைலட் இறங்கிவிடுவார்.

வெளிநாட்டில் எண்ணெய் கசிவை நீக்கும் முறை

இதில் முக்கியமான விடயம், உள்ளூர் பைலட் தான் எந்த கடினமான பனி மூட்டம் அல்லது&மழையாக இருந்தாலும் கப்பலை சிறப்பான முறையில் செலுத்த அக்கறையுடன் செயல்படுவார்.  இது உலகம் முழுதும் உள்ள நடைமுறைதான். ஆனால் இந்திய துறைமுகங்களில் இந்த நடைமுறை பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை என்றே தகவல்கள் வருகின்றன  ” என்ற மயில்வாகனன், இன்னொரு தகவலையும் சொன்னார்:

“மலேசியா பாசீர் கூடாங் துறைமுகத்தில் சமீபத்தில் இதே போல ஒரு விபத்து நடந்தது. இரு கப்பல்கள் (APL DENVER WAN HAI) மோதிகொண்டன.   எண்ணூர் போலவே அங்கும் எண்ணெய் கசிவு ஏற்பட்டு விட்டது…
ஆனால் நமது நாட்டினை போல, அவர்கள் 32கி.மீ எண்ணையை பரவவிடவில்லை..

கசிவு என தகவல் வந்த உடனேயே, மலேசியா சார்பில் இரண்டு படகுகள் (tugboat) சிங்கப்பூர் சார்பாக அந்நாட்டு எல்லையில் 3படகுகள் (Singapore tugboat) எண்ணெய் பரவாமல் தடுக்கும் கருவிகளுடன் வந்து நின்றன.  வலை போன்ற ஒன்றை பயன்படுத்தி  எண்ணெய் பரவாமல் தடுத்து விட்டனர். (பஸ் டியூப் போல இருக்கும்) அதாவது, 5 சதுர கிலோ மீட்டருக்குள் கசிவு தடுத்து நிறுத்தப்பட்டது.

ஆனால் நாம் வாளியில் அள்ளிகொண்டு இருக்கிறோம்..  32 கிலோ மீட்டருக்கு கசிவை பரவ விட்டுவிட்டோம்.

இதில் இருந்து நமக்கு தெரிவது,  நாம் தொழில்நுட்பத்தில்  மிக,மிக பின்தங்கிய நிலையில் உள்ளோம் என்பதுதான்” என்றார் சிங்கப்பூர் துறைமுகத்தில் பணியாற்றும் மயில்வாகனன்.

ண்ணெய்வளம் கொழிக்கும் வளைகுடா நாடுகள் பலவற்றின் எண்ணெய் வயல்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் ஆர். ஜேம்ஸ். இவரை தொடர்புகொண்டு பேசியபோது, “தொழில் நுட்ப விசயங்களில் இந்தியா மிக பின்னடைந்திருக்கிறது என்பது ஒரு புறம் இருக்கட்டும். நிர்வாக ரீதியிலும் அக்கறையினறி இருக்கிறார்கள் என்பதுதான் இன்னும் வருத்தம்.

குவைத் தினமும் 2.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்வதன் மூலம் உலகின் 6 வது பெரிய எண்ணெய் வள நாடாக திகழ்கிறது.

குவைத், தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அல் மக்வா (Al Maqwa) எண்ணெய் வயலில் சமீபத்தில் கசிவு ஏற்பட்டது. உடனே, குவைத் தேசிய எண்ணெய் நிறுவனம் அவசரகால நிலையை பிரகடனம் செய்தது. நாட்டின் அத்தனை அரசுத் துறைகளின் கவனமும் இந்த கசிவை நோக்கியே இருந்தன. அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கசிவை நீக்கியது.

கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதுமே, எண்ணெய் தொழில் பாதுகாப்பு இயக்குனரகம், கடலோரக் காவல்படை, கடற்படை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும்.

ஆனால், எண்ணூர் துறைமுக நிர்வாகம் அதை செய்யவில்லை. வங்கக் கடலில் எண்ணெய் மாசு உள்ளிட்ட எந்த பாதிப்பும் இல்லை என்று தவறான  அறிக்கை வெளியிட்டது. அது மட்டுமல்ல…அதற்கு அடுத்த நாள் துறைமுகத்தைப் பார்வையிட்ட மத்திய அமைச்சரும் கச்சா எண்ணெய் கசிவால் எந்த பாதிப்பும் இல்லை என்றார். இதிலிருந்தே இந்திய அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்” என்றார் வருத்தத்தோடு.

மேகநாதன்

சுற்றுச்சூழல் ஆர்வலர் மேகநாதனிடம் பேசினோம். அவரும் இதே கருத்தை முன்வைத்தார்:

“சென்னையில், பக்கம் பக்கமாக மூன்று துறைமுகங்கள் இருக்கின்றன.  விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதை உணர்ந்து, அவசரகால மீட்புத் திட்டங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதுகுறித்த அடிப்படை புரிதல் கூட துறைமுக அதிகாரிகளுக்கு  இல்லை” என்றார் சுற்றுச்சூழல் ஆர்வலர் மேகநாதன்.

சரக்குக்கப்பல்களில் நீண்டகால பணி அனுபவம் கொண்ட கே.டி.எஸ். செந்தில் குமாரிடம் பேசினோம். அவர், “கடலில் கச்சா எண்ணெய் கசிந்துவிட்டால், அதை அகற்றுவதற்கு சிறப்பான தொழில் நுட்ப அறிவு, வசதிகள் தேவை. இங்கே இரண்டும் இல்லை என்பது சோகமான உண்மை.

இந்த  தொழில்நுட்பத்தில் வல்லமை பெற்றது அமெரிக்காவின் டெலவர் பல்கலைக்கழகம். கழிவகற்றும் தன்மை கொண்ட வேதிப்பொருட்களை கச்சா எண்ணெய் கசிவுகள் மீது ஹெலிகாப்டர் மூலம் வீசலாம். இதனால் கசிவு பரவும் வேகம் குறையும். மேலும், வேதிவினைக்கு உள்ளாகி மக்கி தண்ணீருடன் கலந்து விடும். அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

இன்னொரு முறையும் இருக்கிறது. கசிவு பகுதிகளில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை விடலாம். இதன் மூலம் கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்றலாம்.

எண்ணெய் கசிவை தடுக்கும் பூம் தடுப்பான்களை பொருத்தி, தண்ணீரையும், எண்ணெயையும் பிரித்து அகற்றும் ஸ்கிம்மர் கருவி மூலம் கடலை சுத்தப்படுத்தப்படுத்தலாம்” என்றார் மேகநாதன்.

திருத்தணிகாசலம்

சித்த வைத்தியர் கா. திருத்தணிகாச்சலம், இன்னொரு ஆலோசனையைச் சொல்கிறார்:

“தேங்காய் நார் கழிவுகளை பயன்படுத்தலாம் . நிறைய அளவில் நம்மிடம் உள்ளது

நார்கழிவுகளை ஹெலிகாப்டர்கள் மூலம் கடல்மேல்பரப்பில் தூவுவதன்மூலம்

எண்ணைப்படலங்கள் தேங்காய்நார்கழிவுடன் சேர்ந்து அலைகளால்  கடற்கரைக்கு அடித்துவரப்படும் சுத்திகரிப்பது எளிதானது. இது குறித்து எண்ணூர் துறைமுக அதிகாரிகளிடமும் பேசினேன்.

Surfactants அல்லது சோப்பு நுறைகளை பயன்படுத்துவது என்று துறைமுக அதிகாரிகள் முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால் இது கடலை மேலும் மாசுபடுத்தும்” என்கிறார் சித்தர் க திருத்தணிகாசலம்.

கப்பல்கள் மோதிக்கொண்டதாலேயே இந்த எண்ணைக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு அந்த கப்பல் நிறுவனங்களிடமிருந்து  இழப்பீடு பெற வாய்ப்பு உள்ளதா என, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அருள் துமிலனிடம் கேட்டோம்.

அருள் துமிலன்

அவர், “நிச்சயமாக பெற முடியும். கப்பல் நிறுவனங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 280, 336 ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம்.

அது மட்டுல்ல.. பங்கர் உடன்பாடு எனப்படும் பன்னாட்டு கடல்சார் அமைப்பு உடன்படிக்கை உள்ளது. கச்சா எண்ணெய் கசிவுக்கு யார் காரணமோ, அவர்களிடம் தான் இழப்பீடு பெற வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே எண்ணூர் துறைமுகத்தில் நடந்த கசிவுக்கு காரணமான இரு கப்பல் நிறுவனங்களிடமிருந்து இழப்பீட்டை வசூலிக்கலாம்” என்றார் வழக்கறிஞர் அருள் துமிலன்..

எண்ணூர் துறைமுக வட்டாரத்தில் பேசினோம். தங்களை வெளிக்காட்ட விரும்பாத இரு அதிகாரிகள் நம்மிடம் விளக்கமாக பேசினார்கள். அவர்கள் கூறியது இதுதான்:

“துறைமுக எல்லைக்குள் ஏற்படும் எண்ணெய் கசிவை கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள் இருந்தாலும் துறைமுகத்துக்கு வெளியில் ஏற்படும் எண்ணெய் கசிவை எதிர்கொள்ள சரியான திட்டம் இல்லை. ஆகவே இதுகுறித்து எண்ணெய் கசிவு மேலாண்மை திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்  என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலராக இருந்த ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவிட்டிருந்தார். அதற்கான திட்டத்தை பல்வேறு வல்லுநர் களைக் கொண்டு உருவாக்கும் பணி, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஆணையமும், பல்வேறு வல்லுநர்களைக் கொண்ட குழு அமைத்து திட்டத்தையும் உருவாக்கியது.

பாவப்பட்ட உயிரினம்

ஆனால், தமிழகத்தில் உள்ள துறைமுக நிர்வாகத்தினர், “கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதை உடனே கண்டுபிடிக்கவும், அரை மணி நேரத்தில் கசிவுகளை அகற்றவும் தேவைப்படும் தொழில்நுட்பங்கள், கருவிகள் எல்லாமும் நாங்கள் வைத்திருக்கிறோம். ஆகவே இதற்கென தனியாக ஏதும் திட்டம் தேவையில்லை” என்று அலட்சியமாக கூறினார்கள்.

ஆனாலும், அரசு முதன்மைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, கடலோர மண்டல மேலாண்மை ஆணைய உறுப்பினர் செயலர் மல்லேசப்பா இருவரின் முயற்சியால் திட்டம் உருவாக்கப்பட்டது.

இருப்பினும் அந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்குள்ள துறைமுக அதிகாரிகளும் அக்கறை செலுத்தவில்லை.  அதனால் தற்போது ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவை கையாள முடியாமல், சீரமைக்கும் பணி நாள் கணக்கில் தொடர்ந்துகொண்டிருக்கிறது” என்றார் அந்த அதிகாரி.

ஆக, அடிப்படை தவறு அரசிடமும், அதிகார வர்க்கத்திடமும் இருக்கிறது.  வழக்கம்போல தண்டணை பெறுவது மட்டும் மக்கள்!  ( இந்த முறை, கடல்வாழ் உயிரினங்களும்!)

–    டி.வி.எஸ். சோமு