சென்னை: ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கணை கோமதி மாரிமுத்து, தடைசெய்யப்பட்ட ஊக்க மருத்தை பயன்படுத்தினார் என்பது சோதனையில் தெரிய வந்துள்ளதாக டெக்கான் ஹெரால்டு பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

ஆனால், அது எந்தவகையான ஊக்க மருந்து என்ற தகவல் அந்த செய்தியில் வெளியிடப்படவில்லை.

ஆனால், இந்த செய்தி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ள கோமதி, தனக்கு சோதனை தொடர்பாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

“நான் இந்தக் குற்றச்சாட்டை செய்தித்தாளில்தான் பார்த்தேன். இதற்கு முன்பாக எனக்கு இதுகுறித்த எந்த தகவலும் வரவில்லை. எனவே, தளடக ஃபெடரேஷனிடம் இதுகுறித்த விளக்கத்தைக் கேட்டுள்ளேன்.

இப்படிப்பட்ட செய்தியை வெளியிடும் முன்னதாக, என்னிடம் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை. இந்த செய்தியை அந்தப் பத்திரிகை எங்கிருந்து பெற்றார்கள் என்றே தெரியவில்லை.

இதுகுறித்து என்னிடம் கேட்காமல் எப்படி செய்தி வெளியிட்டார்கள்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், மிகவும் பின்தங்கிய ஒரு பின்னணியிலிருந்து வந்து, இந்தளவு உயரத்தை அடைந்துள்ள பெண்ணின் வளர்ச்சிப் பொறுக்காத ஆதிக்கவாதிகள்தான் இப்படியான புரளியை பரப்புவதாக சமூகவலைதளவாசிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.