கருணாநிதி எப்படி சம்பாதித்தார் தெரியுமா?: கட்ஜூவுக்கு விளக்கம் சொல்லும் திமுக

--

திமுக தலைவர் கருணாநிதி, வயோதிகம் காரணமாக உடல் நலிவு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை துணை குடியரத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். தவிர மாநில மற்றும் தேசிய அரசியல் தலைவர்ள், திரையுலகப்பிரமுகர்களும் நலம் விசாரித்துவருகிறார்கள்.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள்  தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு, “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி மீது தமிழர்கள் மிகுந்த பரிதாபப்படுகிறார்கள். ஆனால் கருணாநிதி அரசியலுக்கு வரும் முன் அவரது சொத்து மதிப்பு என்ன? இப்போது கருணாநிதி, அவரது மனைவிகள். ஸ்டாலின், கனிமொழி, மாறன் பிரதர்ஸ் மற்றும் அவரது உறவினர்கள் சொத்து மதிப்பு என்ன? காமராஜர் உயிரிழந்தபோது அவரிடம் எதுவுமே இல்லை. ஆனால் தற்போது இது தலைகீழாக உள்ளது” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மார்கண்டேய கட்ஜுவின் இந்த விமர்சனத்திற்கு திமுக ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில்,” கட்ஜு நீங்கள் சங் பரிவார் ஆட்களை போல் வடிக்கட்டிய பொய் சொல்லும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். கருணாநிதி 18 வயதானபோது, முரசொலியை வார இதழாக தொடங்கினார். அது மட்டுமில்லாமல் குங்குமம், முத்தாரம், வண்ணத்திரை மற்றும் ரைசிங் சன் (ஆங்கில இதழ்) ஆகியவையும் அவரால் தொடங்கபட்டது.

அதே 18 வயதில் கருணாநிதி நாடகங்களும் எழுதத் தொடங்கியிருந்தார். திராவிடர் கழகத்தின் கொள்கை விளக்கக் கூட்டங்களிலும் பங்குபெற்று வந்தார். அவர் 1949-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த 2 ஆண்டுகளில் மாடர்ன் தியேட்டர்ஸில் கதாசிரியராக மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் பணியில் இணைந்தார்.

அதே வருடத்தில் செப்டம்பர் 17-ம் தேதி கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் நடந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தொடக்க விழாவில் பங்குபெற்றார் உங்களுடைய சினிமா ரசனையை வைத்து பார்க்கும்போது, உங்களுக்கு(கட்ஜு) தமிழ் சினிமாவின் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணனைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த காலகட்டத்தில் ‘மணமகள்’ படத்திற்கு திரைக்கதை எழுதியதற்காக என்.எஸ்.கே கிருஷ்ணன் கருணாநிதிக்கு 10,000 ரூபாய் சம்பளம் கொடுத்தார்

தென் இந்தியாவின் மற்றொரு முதுபெரும் சினிமா தயாரிப்பாளர் எல்.வி.பிரசாத், ‘இருவர் உள்ளம்’ திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியதற்காக கருணாநிதிக்கு 10,000 ரூபாய் சம்பளம் கொடுத்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதால் மேலும் 10,000 ரூபாயும் அவருக்கு வழங்கப்பட்டது கருணாநிதி தற்போது குடியிருக்கும் கோபாலபுரம் வீடு 45,000 ரூபாய்க்கு அவர் அமைச்சர் ஆவதற்கு முன்பே வாங்கப்பட்டது. அது அவருடைய இறப்பிற்குப் பின் மருத்துவமனையாக மாற உள்ளது

கருணாநிதி முதன்முதலாக 1957-ல் தேர்தலில் நின்றார். ஆனால் அதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பே கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டுவிட்டது. மேலும், அந்த சமயத்திலேயே கருணாநிதியிடம் கார் இருந்தது. அவர் அப்போது சிவாஜியை விட 2 மடங்கு சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார் உங்களுடைய மனம் அறியாமையால் சூழப்பட்டிருப்பதால். உங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள இந்தப் பத்திரிக்கை செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம் என 2010-ல் கருணாநிதி வெளியிட்ட சொத்து விவரங்களையும் அந்த ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது