“அண்ணன் இறந்தது எப்படி?”:  நடித்துக்காட்டச் சொன்ன காவலர்களால் தம்பியும் மரணம்


காவல்துறையினரின் கவனக்குறைவால்  அண்ணனைத் தொடர்ந்து தம்பியும் மரணமடைந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம், கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 37). இவரது தம்பி ராஜூ (வயது 30). இருவரும் கட்டிட வேலை பார்த்துவந்தனர்.

கணேசனுக்கு சத்யா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். ஒரு வருடத்துக்கு  முன் திருமணமான ராஜுவின் மனைவி விஜயா, தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கீழ்வேளூரில் அண்ணன் கணேசனும் அருகில் உள்ள   பாலக்குறிச்சியில் தம்பி ராஜூவும் வசித்து வந்தனர்.  வழக்கம்போல அண்ணனைப் பார்க்க  ராஜூ வந்தார். அப்போது  அண்ணன் கணேசன் தன் வீட்டில் உள்ள ஸ்விட்ச் போர்டை ரிப்பேர் பார்த்துக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக கணேசனை மின்சாரம் தாக்கியது.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கணேசன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர்  “கணேசனை மின்சாரம் தாக்கியது எப்படி?”  என்று நடித்துக்காட்ட தம்பி ராஜூவிடம் கூறினர். ராஜூவும் அதேபோல நடித்துக்காட்ட, அவரையும் மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட ராஜூ, சம்பவ இடத்திலேயே பலியானார்.

நடித்துக் காட்டும்போது, மின் இணைப்பைத் துண்டித்துவிட வேண்டுமென்ற குறைந்தபட்ச சிந்தனைகூட இல்லாமல்  காவல்துறையினர் செயல்பட்டனர் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

போலீஸாரை என்ன சொல்வது என்று தெரியவில்லை.

கணவர்களை இழந்த அவர்களின் மனைவிகள் அழுது துடிக்கின்றனர். குறிப்பாக கர்ப்பிணியாக உள்ள ராஜூவின் மனைவி கதறித் துடித்தது, காண்போரை கலங்கவைத்தது. பலியான இருவரின் உடல்களும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன.