புவனேஷ்வர்:

கடும் புயலில் இருந்து லட்சக்கணக்கான மக்களை எப்படி காப்பாற்றுவது என்று இந்தியாவின் ஏழை மாநிலமான ஒடிஷாவை கேளுங்கள் என தி நியூயார்க் டைம்ஸ் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளது.


அந்த செய்தியின் விவரம் வருமாறு:

ஃபானி புயல் தாக்குதல் குறித்த அறிவிப்பு வெளிவந்தவுடனேயே ஒடிஷா மாநில அதிகாரிகள் வேகத்துடன் செயல்பட்டுள்ளனர்.

இது குறித்த தகவலை உள்ளூர் மொழி உட்பட பல மொழிகளில் குறுந்தகவல்களாக தெரிவித்துள்ளனர்.
26 லட்சம் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டன.

43 ஆயிரம் தன்னார்வலர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவசரகால ஊழியர்கள், கடலோர காவல் படை, போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் களம் இறங்கினர்.

புயல் வருகிறது, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுங்கள் என்ற வாசகம் அனைவரையும் சென்றடைந்தது.

சொன்னபடியே ஃபானி புயல் 200 கி.மீ வேகத்தில் கரையை கடந்து பூரி பகுதியையே துவம்சம் செய்துவிட்டது.

அதிகாரிகளின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் லட்சக் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
விரல் விட்டு எண்ணக்கூடிய வகையிலேயே இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

இந்தியாவின் ஏழை மாநிலமான ஒடிஷாவில், அதிகாரிகள் மேற்கொண்ட அதிவேக நடவடிக்கை பெரும் சாதனையே.

கடந்த கால பேரிழப்பை கணக்கில் கொண்டு, பல லட்சம் மக்களை வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக தங்கவைத்து காப்பாற்றியுள்ளனர்.

சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்றியது மாபெரும் வெற்றி என்று முன்னாள் கடற்படை அதிகாரி அபிஜித் சிங் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், பக்கத்து நாடான பங்களாதேஷில் ஃபானி புயலுக்கு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு ஒத்திவைப்பு

ஃபானி புயல் காரணமாக ஒடிஷா மாநிலத்தில் மட்டும் மே 5-ம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.