ஒவ்வொரு நாட்டிலும்  குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை ஒவ்வொரு விதமாக நிறை வேற்றப்படுகிறது.

மது நாட்டில், பருத்தி நூலுடன் ரசாயனக் கலவை கலந்து, தயாரிக்கப்படும் விசேஷ கயிறு மூலம தூக்கு தண்டனை காலம் காலமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது..

அதுபோல நமது நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களின் சிறைச்சாலைகளில் தூக்கிலிடும் வசதிகள் உள்ளன. அதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் என பிரத்யேகமான சிறை விதிகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இன்று டெல்லியின் திகார் சிறையில், தூக்கில் போடப்பட உள்ள நிர்பயா பாலியல், கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு,  டெல்லியின் சிறை கையேட்டின் விதிகள் படி தூக்கிலிடப்படு கிறார்கள்..

அதன்படி,  சிஆர்பிசி (குற்றவியல் நடைமுறை சட்டம்) இன் கீழ் குற்றவாளிகளுக்கு மரண உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.  அந்த உத்தரவில் தூக்கிலிடப்படும் தேதி, அதற்கான நேரம், மற்றும் இடம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இது பிளாக் வாரண்ட் (Black Warrant) என்றும் குறிப்பிடப்படுகிறது. காரணம் என்னவென்றால், இந்த வாரண்டின் நான்கு மூலைகளிலும் கருப்பு நிற கட்டம் போடப்பட்டிருக்கும்.

மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாள் உறுதியானவுடன் குற்றவாளி, மற்ற கைதிகளிடம் இருந்து பிரித்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டு பிரத்யேக கண்காணிப்பில் தனிச்சிறையில் அடைக்கப்படுவார்.

பொதுவாக குற்றவாளிகள்  தூக்கிலிடப்படுவதற்கு முன்னதாக 14 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.

இந்த சமயங்களில், சிறையில், அவர்களுக்கு மனநல ஆலோசனைகள், அதற்கான மருத்துவ நிபுணர்கள் மூலம் வழங்கப்பட்டு வரும். அதே வேளையில், குற்றவாளிகள் தங்களது  குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பதற்கும், தங்களது கடைசிகால ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும்,  தண்டனையை மறந்து, தங்களை தயார்படுத்திக்கொள்ளவும்  அவகாசம் கொடுக்கப்படுகிறது.

தங்களது சொத்து மற்றும் முக்கிய விவரங்கள் குறித்து உயில் ஏதாவது எழுத விரும்பினால், அதற்கு தேவையான ஏற்பாடுகளும் சிறை நிர்வாகத்தால் செய்து கொடுக்கப்படும்… அதில் அவரது கடைசி விருப்பங்களை எழுதலாம்.

அதுபோல, குற்றவாளிகள்,  தங்களது உயிர்பிரியும் நேரத்தில், தங்களுடன், அவர்களுடைய மதங்களைச் சார்ந்த குருவானவர்கள் யாராவது இருக்க வேண்டும் விரும்பினால், அதை குறிப்பிட்ட நபர்கள் ஏற்றுக்கொண்டால், அதற்கான ஏற்பாடுகள் சிறை கண்காணிப்பாளர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு, அவரது ஆசை நிறைவேற்றப்படும்.

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும்  முழுப் பொறுப்பும் சிறைக் கண்காணிப்பாளருக்கு உடையது.

தூக்கு மேடை, தூக்கு கயிறு, குற்றவாளியின் முகத்தை மறைக்கும் முகமூடி உள்பட அனைத்தும் தயாராக இருப்பதை அவர் உறுதி செய்திருக்க வேண்டும்.

தூக்கு மேடையில் பலகை சரியாக பொருத்தப்பட்டிருப்பதையும், தூக்கு தண்டனை நிறைவேற்ற பயன்படுத்தும் கயிறு, கயிறை சுண்டி இழுக்கும் நெம்புகோல் போன்றவை எந்தவித தடங்களுமின்றி சரியாக வேலை செய்கிறதா என்பதை பல முறை சரிபார்த்து, உறுதி செய்ய வேண்டும்..

அதுபோல, தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கு முந்தைய நாள் மாலை, தூக்கு மேடை மற்றும் கயிறுகள் மீண்டும் சோதிக்கப்பட்டு, மீண்டும்  கைதியின் எடையை விட ஒன்றரை மடங்கு எடையுள்ள மணல் மூட்டையை  தொங்கவிட்டு சோதனை செய்வதும் வழக்கம்.

மரண தண்டனை நிறைவேற்றுபவர், தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சிறைக்கு வந்து அங்கேயே தங்கியிருந்து, தேவையான ஏற்பாடுகளை செய்வதும் வழக்கமான நடைமுறை.

தூக்கு தண்டனை நிறைவேற்றுவமுது, நீதிமன்ற உத்தரவுபடி குறிப்பிட்ட நேரத்தில் சரியாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பொதுவாக  தூக்கு தண்டனை காலை வேளையில்தான் நிறைவேற்றப்படும்.

தூக்குதண்டனை நிறைவேற்றப்படும் குற்றவாளிகளின் அடைக்கப்பட்டுள்ள தனி செல்லுக்கு, தண்டனை நிறைவேற்றப்பட உள்ள சில நிமிடங்களுக்கு முன்பு  சிறைக் கண்காணிப்பாளரும், சிறையின் துணைக் கண்காணிப்பாளரும் சென்று அவர்களின் அங்க அடையாளங்களை மீண்டும் சரிபார்ப்பார்கள்.

பின்னர், குற்றவாளிகளிடம்,  மரண உத்தரவில் இருக்கும் வாரண்டை, அவர்களுக்கு புரியும் மொழியில் படித்துக் காட்டுவார்கள்.

அதைத்தொடர்ந்து குற்றவாளிகள் ஏதேனும் கூற விரும்பினால், அது பதிவு செய்யப்படும்.

பின்னர் ககுற்றவாளிக்கு துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் கருப்பு நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.

குற்றவாளியின் கைகள் அவரது முதுகுக்கு பின்னால் கட்டப்படும்.

காலில் விலங்குகள் போடப்பட்டிருந்தால், அவை அகற்றப்படும்.

அதையடுத்து,  தூக்கிலிடப்படும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்.

தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு  குற்றவாளி தூக்கு மேடையை நோக்கி அழைத்துச் செல்லப்படுவார்.

அப்போது,  சிறை கண்காணிப்பாளர், மாஜிஸ்திரேட், மருத்துவ அதிகாரி ஆகியோர் மற்றும்,  சிறையின் துணைக் கண்காணிப்பாளர், தலைமை வார்டன் மற்றும் ஆறு வார்டன்கள் அங்கு இருப்பார்கள்.

குற்றவாளியின் முன்னும் பின்னும் தலா இரண்டு வார்டன்களும், இரண்டு பக்கங்களிலும் தலா ஒரு வார்டனும் நடப்பர்கள். குற்றவாளியின் இருபுறமும் நடக்கும் வார்டன்கள் அவரின் கைகளை பிடித்திருப்பார்கள்.

மாஜிஸ்திரேட் முன்பு, கைதியின் அடையாளம் சரி பார்க்கப்பட்டதாகவும், அவருடைய தாய்மொழியிலேயே வாரண்டை படித்துக் காட்டியதகவும் சிறைக் கண்காணிப்பாளர் மாஜிஸ்ட்ரேட்டிடம் கூறுவார்.

இதற்கு பிறகுதான்,  தூக்கு தண்டனை நிறைவேற்றுபவரிடம் கைதி ஒப்படைக்கப்படுவார்.

இப்போது குற்றவாளி தூக்கு மேடையில் ஏற்றப்பட்டு  தூக்குக் கயிறு தொங்கும் இடத்திற்கு நேர் கீழ்பகுதியில் நிற்க வைக்கப்படுவார்.

அதுவரை, சிறைக் கண்காணிப்பாளர், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதியின் கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பார்.

இறுதியாக, மரண தண்டனை நிறைவேற்றுபவர், கைதியின் இரு கால்களையும் இறுக்கமாகக் கட்டியபிறகு, முகத்தில் முகமூடியை மாட்டுவார்.

தொடர்ந்து, தூக்குக் கயிறு கழுத்தில் போடப்படும்.

இப்போது, கைதியை பிடித்துக் கொண்டிருந்த சிறைக் கண்காணிப்பாளர் அங்கிருந்து நகர்ந்து வந்துவிடுவார்.

இதன்பிறகு, தண்டனை நிறைவேற்றும் நேரம் வந்ததும், சிறைக் கண்காணிப்பாளர் சைகை காட்டுவார்.

தூக்கு தண்டனை நிறைவேற்றுபவர் (ஹேங்மேன்) நெம்புகோலை இழுப்பார்.

இப்போது, தூக்கு மேடையில், கைதி நின்றுக் கொண்டிருக்கும் இரு பலகைகள் நகர்ந்ததும், கைதியின் காலின் கீழ் ஏற்படும் வெற்றிடத்தால் உடல் அந்தரத்தில் தொங்கும்.

தூக்குக்கயிறு குற்றவாளியின் கழுத்தை இறுக்கத் தொடங்கும். சற்று நேரத்தில் கைதி இறந்து விடுவார்.

உடல் அப்படியே அரை மணி நேரம் தொங்கிக் கொண்டிருக்கும்.

அரை மணி நேரம் கழித்து, சிறை மருத்துவர் பரிசோதித்த பிறகு மரணத்தை அறிவிப்பார்.

அதன் பிறகு, தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் சடலம் கழற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.

மரண தண்டனை நிறைவேற்றப்படும் செயல்முறை நிறைவடைந்தது என்பதை மரண உத்தரவு ஆவணத்தில் எழுதும் சிறைக் கண்காணிப்பாளர் அதை திருப்பி அனுப்புவார்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட உடனே, சிறைக் கண்காணிப்பாளர் இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு அறிக்கை அளிப்பார்.

உத்தரவை நிறைவேற்றியதாக சிறைக் கண்காணிப்பாளர் எழுதிய மரண உத்தரவு, அதை பிறப்பித்த நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பப்படும்.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, குற்றவாளியின் சடலம் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

பாதுகாப்புக் காரணங்கள் ஏதேனும் இருந்தால், சிறை கண்காணிப்பாளரின் முன்னிலையிலேயே சடலம் எரிக்கப்படும் அல்லது புதைக்கப்படும்.

பொது விடுமுறை நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தூக்கு கயிறு தயாரிப்பது எப்படி?