எப்படி இருக்கிறது டெல்டா மாவட்டங்கள்? என்ன செய்ய வேண்டும் அரசு?

மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் அவர்களது முகநூல் பதிவு:

த்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும்.

என்கிறான் பாரதி “காணி நிலம் வேண்டும் – பராசக்தி” பாடலில். அந்தக் காணி நிலக் கனவைக் “கஜா” கண்ணீரோடு சாய்த்து விட்டது.

குயில்களுக்கோ இடமில்லை. கூடி வாழ்ந்த குடும்பங்களோ குற்றுயிரும் குலையுயிருமாகத் தவிக்கின்றன.

வரப்போகும் பவுர்ணமி நிலவோ பகலவனாய்த் தகிக்கப் போகிறது!

கஜா பெரிதும் பாதித்த பகுதிகளில் ஒன்றான பேராவூரணியில் நிலத்தை “மா” என்று கணக்குப் போடுவார்கள்.

சுமார் மூன்றரை மா சேர்ந்தால் ஒரு ஏக்கர். பராசக்தியிடம் பாரதி வேண்டி விரும்பிக் கேட்ட காணி நிலம் என்பது 100 குழி அளவுள்ள நிலப்பரப்பு.

அதாவது ஒரு மா. (1 குழி = 12 X12 அடி = 144 ச.அடி) ஒரு மா நிலத்தில் குறைந்தது 25 தென்னை மரம் நடுவார்கள். பாரதி கணக்குப்படி கிணறு, மற்றும் ஒரு சின்ன வீடு போக 10-12 தென்னை மரம்.

பேராவூரணி நாடியம் கிராமத்தில் தங்கி வேளாண் ஆய்வுகள் மேற்கொள்ள சில ஆண்டுகளுக்கு முன்பு வாய்ப்புக் கிடைத்தது.

மாதம் 20 நாள் நானும் என் மனைவியும் அங்கு சென்று விடுவோம். அப்போது தான் தென்னை விவசாயத்தின் பொருளாதார வலிமை பற்றி தெரிந்து கொண்டேன்.

இப்போது லட்சக்கணக்கான மரங்கள் தரையோடு சாய்ந்து கிடப்பதைப் பார்க்கையில் நெஞ்சு பதறுகிறது.

தென்னை விவசாயம் ஒரு தொழில். தேங்காய் பறிப்பவர்கள், கடன் கொடுக்கும் வியாபாரிகள், மரத்துக்கு மருந்து கட்டுபவர்கள், கீற்று முடைபவர்கள், உரி மட்டை எடுப்பவர்கள், நார்க் கயிறு திரிப்பவர்கள், மட்டை பொறுக்குபவர்கள், விலைக்குத் தேங்காய் வாங்கிக் கொப்பரை எடுத்து விற்பவர்கள் என்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதில் ஈடுபட்டுள்ளனர்

பேராவூரணி, புதுக்கோட்டை சாமான்யர்கள் கூட வீட்டுக்கு நான்கைந்து மரமாவது வைத்து இருப்பார்கள்.

தேங்காய் ஒன்றின் கொள்முதல் விலை பத்து ரூபாய் என்று வைத்தால் கூட மரத்துக்கு 25-30 காய் வீதம் 6 பறிப்புக்கு வருடத்திற்கு ஒரு மரத்திற்கு 1500 முதல் 2000 ரூபாய்க்குப பழுது இல்லை.

எனவே தென்னை அழிந்தால் எண்ணற்றோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி.

பேராவூரணி பகுதிகளில் தேங்காயை நம்பிக் கடன் கொடுத்துப் பிழைத்துவரும் வியாபாரிகள் ஏராளம்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் சகாயவட்டிக்குக் கடன் வாங்கிச சற்றுக் கூடுதல் வட்டி வைத்து சுற்றுக்கு விடுவார்கள்.

அவர்கள் கூட விழிநீரோடு எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் தத்தளிக்கிறார்கள். குறைந்த பட்சம் சுமார் 30 கோடி ரூபாய் புழங்கும் தொழில் அது.

இது போக பேராவூரணி மற்றும் அதைச் சுற்றி உள்ள புதுக்கோட்டை மாவட்ட எல்லையோரக் கிராமங்களில் “மொய் விருந்து” என்ற கிராமப்புறக் கடன் பெறும் முறை இன்னமும் அமலில் இருக்கிறது.

ஆடி மாதம் துவங்கி ஆவணி பாதி வரை “மொய்” பிடிப்பார்கள்.

மொய்யில் இருவகை உண்டு திருமணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா போன்ற குடும்ப விழாக்களில் அளிக்கப்படும் மொய் ஒருவகை. அது அன்பளிப்பு. அதைக் “கும்பிடு பணம்” என்பார்கள்.

ஆனால் மொய் வசூலிக்கும் எண்ணத்துடனே ஏற்பாடு செய்யப்படும் “மொய்விருந்து” என்பது கடன்! ஒருவகை “நிதி திரட்டல்” தான்!

 

மொய் விருந்தில் அழைப்பிதழ் அச்சடித்து தெரிந்தவர்களுக்கு எல்லாம் கொடுக்கப்படுகிறது. “ப்ளக்ஸ்” பேனர்களும் உண்டு.

ஐந்து அல்லது பத்து நபர்கள் சேர்ந்தும் நடத்தலாம். ஆட்டுக்கறியுடன் கூடிய விருந்துச சாப்பாடு பறிமாறப்படும்.

உண்டவர்கள் தாங்கள் விரும்பியவருக்கு மொய்ப்பணம் எழுதுவார்கள்.கட்டாயம் இல்லை.

ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையே மொய் பிடிக்க வேண்டும். கணக்கு எழுதிவைத்து மொய் வைத்தவர்கள் மீண்டும் விருந்து வைக்கும்போது கூடுதல் தொகையை மொய்யாக வைப்பார்கள்.

பல தலைமுறைகளாகத் தொடரும் பழக்கம் இது. நாங்கள் பேராவூரணி பகுதிகளில் சுற்றித் திரிந்தபோது இந்த எளிய ஏற்பாட்டைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனோம்.

வங்கிகள் தோன்றாத காலத்தில் விவசாயிகள் தங்களுக்குள் செய்துகொண்ட கடன் ஏற்பாடு அது. தலைமுறை தாண்டியும் தொடர்கிறது.

சில விருந்துகளில் கோடிக்கணக்கில் பணம் புரளும். தாள் என்னும் இயந்திரங்கள் பயன்படுத்துவதைக் கூடப் பார்த்து இருக்கிறேன்.தென்னை விவசாயிகள் வேளாண்மையைப் பெருக்க மொய் விருந்துகளை நம்பி இருந்தார்கள்

மொய் திரும்பி எழுதபபடாவிட்டால் அது தன்மானப் பிரச்னை. ஆனால் கஜா அதற்கும் சவால் விடுத்து விட்டது.

தென்னந் தோப்புகளை விரிவுபடுத்த மொய் பிடித்தவர்கள் இருந்த மரங்களையும் இழந்துவிட்டு பித்துப் பிடித்தவர்கள் போல் நிற்கிறார்கள்.

இந்த இயற்கைப் பேரிடர் இருந்தவற்றை மட்டும் அழிக்கவில்லை. இனி இருக்கப் போவதையும் சேர்த்து அழித்து விட்டது.

பேராவூரணி கொன்றைக்காடு காலகம் போன்ற பகுதிகளில் வீடுகளை சுற்றி விழுந்த மரங்களை அகற்றும் பணி நடக்கிறது.

தனியார் பெட்ரோல் இயந்திரங்கள் வியாபார நோக்கத்தோடு இயங்குகின்றன. வீடு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கூலி! மரத்திற்கு ஐநூறு, ஆயிரம் என்று கூசாமல் கேட்கிறார்கள்.

நிவாரணமாக ஒரு மரத்திற்கு 600 ரூ வழங்கவும், அவற்றை வெட்டி அகற்ற 500 ரூபாய் தருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் பல லட்சம் தென்னை மரங்களை அகற்றி வைக்கக் கிராமங்களில் இடம் இல்லை என்பதே யதார்த்தம்.

கடலூரில் அடித்த தானே புயலில் பலா மரங்கள் விழுந்தபோது இலவசமாக மாற வியாபாரிகள் அறுத்து எடுத்துக்கொண்டார்கள். தென்னைக்கு அந்த மரியாதை கிடையாது.

எனவே அரசே ஏற்பாடு செய்து மரம் அறுத்துக் கொடுக்க வேண்டும். தனியார் நிலமாக இருந்தாலும் இலவசமாக அறுத்து அகற்ற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்

பேராவூரணி பட்டுக்கோட்டை உள் கிராமங்களில் பஞ்சாயத்து அமைப்புகள் இல்லாத கொடுமை இப்போது புரிகிறது.

மின்சார வாளுக்கு கரண்ட் இல்லை. பெட்ரோல், டீசல் கொண்டு அறுக்கும் மிஷின்கள் இப்போது தான் வரத் தொடங்க்கி உள்ளன. குடிநீருக்குப் பஞ்சம். பாருக்கு உணவு படைத்த பகுதியில் சோற்றுக்கு வழி இல்லை

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டது மின் சப்ளை. கிராமங்களில் அனேகமாக எல்லா மின் கம்பங்களும் சாய்ந்து விட்டன.

பல நாட்களாக இருட்டு தான். நான் பத்தாவது படிக்கும்போது பாதி ஊரில் கரண்ட இருக்காது. பள்ளியில் இரவு தங்கிப் படிப்போம். ஆனால் எல்லா வீடுகளிலும் அரிக்கேன் லைட் இருக்கும்.

இன்று அதற்கும் வழி கிடையாது. கிராமங்கள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. பாம்புகளும், சிறிய ரக வேட்டை விலங்குகளும் படையெடுத்து வருகின்றன.

இந்த இருட்டை எளிதில் விரட்டி இருக்கலாம். தமிழ்நாட்டில் பல்லாயிரக்க்கணக்கான தனியார் ஜெனரேட்டர்கள் இருக்கின்றன

அவற்றை பேராவூரணி புதுக்கோட்டை பகுதிகளுக்குக் கொண்டு சென்று ஒரு கிராமத்திற்கு 3 மணிநேரம் மின்சாரம் கொடுத்தாலே சமாளிக்கலாம் இப்படி ஆக்கபூர்வப் பணிகளைச் செய்யாமல்

“அபராதம் இல்லாமல் மின் கட்டணம் செலுத்தலாம்!” என்கிறார் மின்சார அமைச்சர்.

“தமிழகத்திற்கு அதிக புயல் வர வேண்டும். அப்போது தான் குடிநீர் பிரச்னை தீரும்!” என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சந்திரமுகியாவே மாறி விட்டார்.

இப்படி உளறிக் கொட்டுவதால் தான் மக்கள் கோபத்திற்கு ஆளாகிறார்கள். ஆனால் அரசியல் காரணங்ககளுக்காக எதிர்ப்புக் காட்டப்படுகிறது என்கிறது அரசு.

ஓரிரு நாளில் நிலைமை சரியாகும் என்று சொல்லி வந்த தமிழக அரசு இப்போது ஒரு வாரத்தில் சரியாகும் என்கிறது.

ஆனால் நான் விசாரித்த வகையில் உள் கிராமங்களுக்குக் கரண்ட வர ஒரு மாதம் கூட பிடிக்கும். எனவே உடனடித தேவை என்பது “நடமாடும் ஜெனரேட்டர்கள்.”

புதுக்கோட்டையில் தனியார் ஜெனரேட்டர் ஒரு மணி நேரத்திற்கு 600 ரூ வாடகை. குடி தண்ணீர் ஏற்றவும் கிரைண்டரில் மாவு அரைக்கவும் செல்போன் சார்ஜ் செய்யவும் பயன் படுத்திக்கொள்கிறார்கள்.

தனியார் வியாபார நோக்கத்தோடு செய்யும்போது தமிழக அரசு லாப நோக்கம் இல்லாமல் செய்யலாம். மிகவும் எளிது. ஆனால் எந்த மந்திரியும் கவலைப்படுவதாகத தெரியவில்லை. கொடுமை.

புதுக்கோட்டை நகரில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் நிமிர்த்தப்பட்டு இணைப்பு தரவேண்டும். அதிக நாள் பிடிக்கிற பணி. கலெக்டர் அலுவலகக் கூட்டங்களில் மின்வாரிய அதிகாரிகள் இயலாமையைக் கூறிவிட்டார்கள்.

ஆனாலும் அரசு வறட்டு கவுரவம் பார்க்கிறது. ராணுவம்/பாரா மிலிட்டரி வந்தால் மின்சார நிலைமை ஒருவாரத்திற்குள்ளாவது சரியாகும். ஆனால் தமிழக அரசுக்கு அதில் விருப்பம் இல்லை.

எனக்குத் தெரிந்த 100 உள் கிராமங்கள் மிகவும் பாதிப்பு. பத்து ஜெனரேட்டர் வண்டிகளை அனுப்பினால் அங்கு குடிதண்ணீர்ப் பிரச்னை தீரும்.

கிராமத்துக்கு கொஞ்சம் வெளிச்சம் வரும். இரண்டு வேளை குளித்துப் பழகிய மக்கள். இன்று காலைக் கடன் கழிக்கக் கூடத் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.

எல்லாக் கிணறுகளையும் மூடி போர்களாக மாற்றியது நாம் செய்த தவறு. புயல் போன்ற பேரிடர் காலங்களில் மின்சாரம் நாட்கணக்கில் தடைபடும்போது கிணறு வசதியாக இருக்கும்.

எனது கல்லூரிக் காலம் வரை எங்கள் ஊரில் திறந்த கிணறும், இலவ்ச ஏற்றமும் இருக்கும். சிறு பையன்கள் குளிக்க வந்தால் அண்ணாச்சிகளே நான்கு வாளி இறைத்து ஊற்றி விடுவார்கள்.

கிராமங்களில் ஊருக்கு ஒரு திறந்த கிணறு அமைப்பது பற்றி இனி நாம் சிந்திக்க வேண்டும். புவி வெப்பமயமாதல் போன்ற புறக் காரணிகளால் கடும் புயல்கள் வரத்தான் செய்யும்.

அவற்றால் ஏற்படப்போகும் இன்னல்களைச் சிந்தித்து முன்னோர்கள் செய்து வைத்த ஏற்பாடுகளை மறந்து விட்டோம்.

ஐப்பசி, கார்த்திகை அடை மழைக் காலத்திற்கு முன்பு முன்பு “கிளை தரித்தல்” என்ற வேளாண் பணி நடைபெறும். மரக் கிளைகளைக் கழிப்பார்கள்.

அந்தப் பழைய பழக்கம் மீண்டும் வர வேண்டும். பனை போன்ற மரங்கள் இயற்கையான காற்றுத் தடுப்பான்களாகப் பயன்பட்டு வந்தன. அவற்றை ஒழித்துக் கட்டி விட்டோம்.

தமிழக அரசின் பழைய வரலாற்றைப் பார்த்தால் பேராவூரணி விவசாயிகள் நம்பிக்கை இழக்கின்றனர்.

2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டபோது ஒவ்வொரு தென்னை மரத்திற்கும் குறைந்தபட்ச இழப்பீடாக ரூ.3,000/ அளிக்க வேண்டுமென்று தமிழக அரசிடம் கோரிகை வைத்தனர்.

பத்து மாதமாக இந்தக் கோரிக்கை குறித்து முடிவெடுக்காமல் இழுத்தடித்து வந்த தமிழக அரசு, இறுதியாக ஒரு மரத்திற்கு ரூ.103/ அளிக்க முன்வந்தது. (தமிழ் இந்து, 24.06.2018)

எனவே தென்னை, பலா, நெல், தேக்கு போன்ற பயிர்களுக்கு கஜா நிவாரணமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இழப்பீடு வராதோ என்ற அச்சம் பேராவூரணி பகுதியில் நிலவுகிறது.

இதைப் போக்கத் துரிதமாக கணக்கெடுப்புகளை முடித்து ஓரிரு வாரங்களுக்குள் நிவாரணத் தொகை சிந்தாமல் சிதறாமல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.

தானே புயல் அடித்த 2011டிசம்பர் 30 அன்று முதல் நிவாரணமாக 150 கோடி ரூபாயும், பின்னர் நான்கு நாள் கழித்து ஜனவரி 3ஆம் தேதி 700 கோடி ரூபாய் என்று மொத்தம் 850 கோடி உடனே விடுவிக்கப்பட்டது.

ஆனால் நிவாரணம் 1000 கோடி என்று இப்போது தான் தமிழக முதல்வர் அறிவித்து இருக்கிறார். அரசின் பழைய வரலாற்றைப் பார்த்தால் இது கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

நெல் எக்டேர் பத்தாயிரம், மற்ற நீர்ப்பாசனப் பயிர்களுக்கு எக்டேர் 7500 ரூ, பலா, முந்திரி போன்ற பணப் பயிர்களுக்கு எக்டேருக்கு 9000 ரூ.என்று தானே நிவாரணம் வழங்கப்பட்டது.

இப்போது தமிழக அரசு அறிவித்து உள்ளது வாழை, தென்னை, நெல் போன்ற பயிர்களுக்கு.

ஆனால் பேராவூரணி, மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் ஏராளமான தேக்கு மரங்கள் முதலீட்டு நோக்கத்தில் (திருமணம், கல்வி போன்ற சுபச் செலவுகளுக்கு) இருபது ஆண்டுகளாக வளர்க்கப்படுகின்றன.

முந்திரி, பலா மரங்களும் ஏராளமாக உள்ளன. அவற்றுக்கும் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.

கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள எக்டேருக்கு 13500 ரூ என்பது மிகவும் குறைந்த தொகை.

அது போலவே மீனவர் உதவித் தொகையும் மிகவும் குறைவு். மீன் படகுகளில் செல்லும் கூலித் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை.

.கஜா சிறு விவசாயிகளை மிகவும் கொடூரமாக தாக்கி வாழ்வாதாரத்தை அழித்து விட்டது தேக்கு பலா மரங்கள் தான் திருமணம் கல்வி போன்றவறுக்கு கை கொடுத்து வந்தன.

க்ஜா எல்லாவற்றையும் காலி செய்துவிட்டது கண்ணீரோடும் பதற்றத்தோடும் உள் கிராமங்களில் தவிப்பவர்களுக்கு ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்லை.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத கொடுமையை கஜா உணர்த்துகிறது..மந்திரிகள் போகும் இடங்களில் மட்டும் அதிகாரிகள் தென்படுகிறார்கள்.

மூன்று கிராமத்திற்கு ஒரு வி.ஏ.ஓ. சிறு விவசாயிகளின் தென்னை மரங்களை வெட்டுவதற்கும் ஆளில்லை. வெட்டிய மரங்களை அப்புறப்படுத்தவும் வழியில்லை.

பட்டுக்கோட்டை பேராவூரணி தென்னை தேசம். மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் பக்கத்து வீடு தெரியாது அந்த அளவுக்கு தென்னை மரங்கள் அடர்த்தி.

கஜா கடந்த பிறகு ஊர் தெரிகிறது. ஒவ்வொரு வீடும் புரிகிறது. ஆனால் கண்ணீர் தான் பார்க்க விடாமல் தடுக்கிறது.

.இதில் பொதுமக்கள் கடமையும் உள்ளது. அரசு மட்டுமே முழுமையான நிவாரணம் தந்துவிட முடியாது.

பிரச்சனை நீர் மேலாண்மையில் உள்ளது பேராவூரணி பகுதிகளில் பொதுவாக மட்டாக நீர் பாய்ச்சுகிறார்கள். அதாவது அப்படியே தண்ணீரைத் திறந்து விடுகிறார்கள்.

அதனால் மண் எப்போதுமே இளகிய நிலையில் உள்ளது. காற்று பலமாக வீசும் போது மரத்தின் தூர்ப் பகுதியின் பலவீனம் தென்னையை விழச் செய்துவிடுகிறது.

சைக்கிள் ஸ்டாண்ட் சரியும்போது சட,சடவென்று எல்லா வண்டிகளும் சரிந்து விழுவது போல் தென்னை மரங்கள் சரிந்து விட்டன.

இனி புதிய நாற்றுக்களை நடும் போது குட்டை-நெட்டை ரகங்களுக்கு முக்கியம் தரலாம். சொட்டு நீர்ப்பாசனம் மட்டுமே பயன் தரும்.

சொட்டுநீர்ப் பாசனத்திற்கு சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் அறிவித்துள்ளது வரவேற்கத் தகுந்தது தான். ஆனால் ஹெக்டேருக்கு ஒரு லட்ச ரூபாய் போதாது.

கடற்கரைப் பகுதிகளில் இருந்த இயற்கையான காற்று தடுப்பான் களான பனை முற்றிலும் அழிந்துவிட்டது.பட்டுக்கோட்டை பேராவூரணி அழிவுக்கு அதுவும் ஒரு காரணம்.

ஒரு தென்னை மரம் ஆண்டுக்கு 2,000 ரூபாய் வரை வருமானம் தரக்கூடியது.இனிமேல் நடவு செய்து வருமானம் பார்ப்பதற்கு ஆண்டுகள் பிடிக்கும்.

அதுவரை தென்னை விவசாயத்தை கூலி பெற்றுக் கொண்டு பார்க்கும் தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் தவிப்பார்கள்.அவர்கள் நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புயல் வந்தாலும் வளர்ந்த மரங்கள் விழுந்து போவதால் ஏற்படும் வலியை தாங்கவே முடியாது.

எனவே அதையெல்லாம் யோசித்து மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.இதை வாய்ப்பாக பயன்படுத்தி நாட்டு தென்னை பயிரிடப்பட்டுள்ள இடங்களில் குட்டை ரக தென்னை நாற்று விலையில்லாமல் கொடுத்து அரசு ஊக்குவிக்க வேண்டும்.

ஊடு பயிர் செய்து மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் இழந்தவற்றை மீட்டுவிடலாம்.

இப்போதே இது குறித்து திட்டமிட்டால் தான் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் நடைமுறைக்குக் கொண்டுவர முடியும்.

புதிய தென்னை சாகுபடிக்கு ஏற்ற உதவிகளையும் அரசு செய்ய வேண்டும் இது இன்றைக்கு இன்றியமையாத தேவை.

முதலமைச்சர் அறிவித்துள்ள நிவாரணத்தொகை சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி பயனாளிகளுக்கும் போய் கிடைக்க வேண்டும்.

அதை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நண்பர்களும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அனைவருமாக சேர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி அதிக நிதி பெற வேண்டும்ஒரு

பேரிடர் தரும் படிப்பினைகள் ஏராளம்.அவற்றை மனதில் கொண்டு திட்டமிட்டு அரசு நிவாரண உதவி செய்ய வேண்டும்.