அரசியலில் காமராஜர் எப்படிப்பட்டவர்? – ஓர் ஆய்வுத் தொடர்! – பாகம் 1

             (காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!)

நிகழ்கால அரசியல் தலைவர்கள் சிலர், தாங்கள் செய்யும் தவறுகள் அல்லது தோல்விகளை மறைக்கவோ அல்லது அதிலிருந்து கவனத்தை திசைதிருப்பவோ, மறைந்துபோன அரசியல் தலைவர்களின் மீது பழிபோடும் வழக்கம் ஒருபுறம் இருக்க, மறைந்துபோன அரசியல் தலைவர்களை முற்றிலும் புனிதமானவர்களாக மாற்றிவிடக்கூடிய ஒரு வழக்கமும் இந்திய அரசியல் கலாச்சாரத்தில் உள்ளது!

காமராஜரின் அரசியல் வரலாறு என்பது பல ஆச்சர்யங்களையும் அதிசயங்களையும் உள்ளடக்கியது என்பதோடு, மிகச் சாமானியப் பின்னணி கொண்ட ஒருவர், அரசியலில் இந்தளவிற்கு உச்சம் தொட முடியுமா? என்பது தொடர்பான ஒரு பெரிய பாடத்தையும் உள்ளடக்கியது.

காமராஜருடைய அரசியல் வாழ்வின் பரிணாமங்களையும் பரிமாணங்களையும் அலசுவதல்ல இத்தொடர். மாறாக, அவருடைய அரசியல் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றிய ஒரு புதிய பார்வையை வைப்பதுடன், ஒரு அரசியல்வாதியாக அவரின் செயல்பாடுகள் எப்படி? என்பதை விரிவாக ஆய்வதே இத்தொடர்!

கடந்த 1954ம் ஆண்டு ராஜகோபால ஆச்சாரியார் சென்னை மாகாண முதல்வர் அரியணையிலிருந்து இறங்கியப் பிறகு, அன்றைய சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவர் காமராஜர் அதில் ஏறி அமர்ந்தபோது நடைபெற்ற சம்பவம் தொடர்பானதுதான் அந்தப் புதிய பார்வை!

இராஜகோபால ஆச்சாரியாரின் அணியைச் சேர்ந்த பக்தவச்சலம் மற்றும் சி.சுப்ரமணியம் ஆகியோரை, (சி.சுப்ரமணியம், 1954ம் ஆண்டு முதல்வர் பதவி கோதாவில், காமராஜரை எதிர்த்து ஆச்சாரியாரால் நிறுத்தப்பட்டவர்) வன்மம் பாராட்டாது, மிகவும் பெருந்தன்மையோடு தனது அமைச்சரவையில் சேர்த்துக்கொண்ட வெள்ளை உள்ளம் படைத்தவர் காமராஜர்! இந்த உயர்ந்த பண்பு, அரசியலில் வேறு யாருக்கு உண்டு! என்ற அளவில் விதந்தோதுகின்றனர் பலர்.

காமராஜருடைய இந்தச் செயலின் நோக்கம் எத்தகையது என்பதை அவர்களில் சிலர், உண்மையில் அறிந்திருந்தே, வேண்டுமென்றே, அரசியலுக்காக அவரின் பெருந்தன்மை இது என்று பேசலாம்! அல்லது பலருக்கு அடிப்படையான அரசியல் புரிதலே இல்லாமல் இருக்கலாம்.

பக்தவச்சலம், சி.சுப்பிரமணியம் ஆகியோரை அமைச்சரவையில் சேர்த்தது காமராஜரின் பெருந்தன்மை என்று பேசுவது பரவலான ஒரு வழக்கமாகிவிட்டது. ஆனால், காமராஜர் பயன்படுத்திய ஒரு சாதாரண அரசியல் உத்தியை, அரசியலாகவேப் பார்க்கலாமே! அதில் எதற்காக தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு கருத்தாக்கத்தை இணைக்க வேண்டும்?

எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். அது அவர்களின் பிரச்சினை. ஆனால், அரசியல் என்ற சித்தாந்தத்தின் அல்லது பாடத்தின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு, அரசியல் நிகழ்வுகளை விருப்பு-வெறுப்பின்றி ஆய்ந்து, அதன் சூட்சுமங்களை ரசிப்பதில் எப்போதுமே ஆர்வம் இருக்கும்.

அப்படியான ஒரு ஆர்வத்தின் வெளிப்பாடுதான் இந்த ஆய்வுத் தொடர்!

தனது தலைமைப் பதவிக்கான அரசியல் போட்டியாளர்களாக அறியப்பட்டவர்களை, வெளியில் விட்டுவைப்பதென்பது, ஒருவகையில் தனக்கான ஆபத்தை நீட்டிக்க விடுவதே. எனவே, தன்னுடன் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டவர்களை சம்மதிக்கச் செய்து, தனது அமைச்சரவையில் தனக்குக் கீழே சேர்த்துக்கொண்டு, அவர்களை டம்மியாக்கி, இனி இவர்கள், தனக்குக் கீழ்தான் என்பதைக் காட்டிவிட்டால், அப்புறம் அவர்களால் மறுபடியும் எளிதில் எதிர்ப்பை வெளிக்காட்ட முடியுமா? அவர்கள் மக்கள் மத்தியில் மீண்டும் எடுபடுவார்களா? காமராஜர் கையாண்டது இத்தகைய ஒரு சாதாரண அரசியல் உத்தியே!

அந்த இருவர் மட்டுமல்ல, ராஜாஜியின் முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களில், ஏ.பி.ஷெட்டி, மாணிக்கவேலு நாயக்கர் மற்றும் ராமநாதபுரம் ராஜா ஆகிய மூவரையும்கூட, காமராஜர் தனது 8 பேர் கொண்ட சிறிய அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார் என்பதையும் பார்க்க வேண்டும். அப்போதைய சூழலுக்கான அரசியல் நிலைமைகளை சமாளிப்பதற்காக காமராஜர் கையாண்ட சில அரசியல் உத்திகளுள் இதுவும் ஒன்று.

அரசியல் என்பது எப்போதுமே சூழ்ச்சிகளும், தந்திரங்களும், சூட்சுமங்களும் நிறைந்த ஒன்று. தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு கரணம் தப்பினால் மரணம் என்ற கதைதான் எந்நேரமும்! அப்படியிருக்கையில், அத்தகைய தலைமைப் பதவிக்கு அரசியல்ரீதியாக, மிகவும் பெருந்தன்மை கொண்ட, வெள்ளை உள்ளம் படைத்த ஒருவர் வந்து அமர்ந்தார் என்று கூறுவது எப்படியானது?

காமராஜர் என்பவர் ஒரு ஆக்கப்பூர்வமான தலைவர். திராவிட இயக்கச் சிந்தனைகளை உள்வாங்கியவர். மூடத்தனத்திற்கு எதிரானவர். சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரானவர். சமூகத்தின் அவலங்களைப் புரிந்து கொண்டிருந்தவர். ஊழலற்ற ஒரு மனிதர், எளிய வாழ்க்கை வாழ்ந்தவர், தமிழகத்தின் முன்னேற்றத்தில் மிக முக்கியப் பங்காற்றியவர், மனவலிமை மிக்கவர், சிறந்த நிர்வாகி, ஒரு அதிசயமான அரசியல்வாதி என்ற கருத்தாக்கங்களில் மாறுபாடுகளைக் கண்டுபிடித்து வாதம் செய்ய முடியாது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், தலைமைப் பதவியில் அமர்ந்த ஒரு அரசியல்வாதி என்ற வகையில், அவர் சிறந்த ராஜதந்திரி, அரசியல் சாணக்கியர், தந்திர அரசியல் நிபுணர் மற்றும் தன் அரசியல் எதிரிகளைக் கையாள்வதில் கைதேர்ந்தவர் மற்றும் மதிநுட்பம் வாய்ந்தவர், சில விஷயங்களில் சமரசமே செய்துகொள்ளாதவர், தன்னை எதிர்த்து அரசியல் செய்த பலரை வெற்றிகரமாக வீழ்த்தியவர் என்ற பட்டங்கள் காமராஜருக்குப் பொருந்தாதா?

அப்படிப் பொருந்தாது எனில் அவர் அரசியல்வாதியே அல்ல; அல்லது அரசியல் சிந்தாந்தமே தவறானது என்று பொருள்!

காமராஜர் மிக நல்ல மனிதர் என்ற காரணத்திற்காக நமக்கெல்லாம் அறிமுகமாகிவிடவில்லை. அவர், அரசியலில் பெற்ற உச்சம்தான், நம்மிடம் அவரைக் கொண்டுவந்து ச‍ேர்த்தது.

மிக மிக எளியதொருப் பின்னணியிலிருந்து வந்த ஒரு மனிதர், அரசியலில் பெரியளவில் உச்சம் தொட வேண்டுமென்றால், மேற்கூறிய அரசியல் சார்ந்த அனைத்து தகுதிகளும், ஒரு அரசியல்வாதியாய் அற்புதமாக அமையப் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால், இத்தகைய அரசியல் வளர்ச்சி எப்போதும் சாத்தியமில்லை. அதைவிடுத்து, எல்லா அம்சங்களிலும் காமராஜரை வெள்ளை உள்ளம் கொண்டவர், பரந்த மனப்பான்மை உடையவர், வெகுளி என்றெல்லாம் பலர் கட்டமைக்க முயல்வது அவர்களுக்கான தனிப்பட்ட நோக்கமாக இருக்கலாமே தவிர, அதில் லாஜிக் எதுவும் இருக்கப்போவதில்லை.

சமூக அந்தஸ்து இல்லாத, வசதி வாய்ப்புக் குறைந்த ஒரு எளிய குடும்பத்தில் பிறக்கும் காமராஜரால் பள்ளிப் படிப்பை நிறைவுசெய்ய முடியவில்லை. காங்கிரஸில் ஒரு எளியத் தொண்டனாக, பதின்ம வயதுகளிலேயே தனது பொது வாழ்வைத் தொடங்கிய காமராஜர், காந்தியடிகள், காங்கிரஸில் மிளிரத் தொடங்கிய காலத்தில், அவரின் சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்படுகிறார்.

காமராஜரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி

கடந்த 1919ம் ஆண்டிலேயே, விருதுநகரில் தனது அரசியல் குருநாதர் சத்தியமூர்த்தியை சந்திக்கும் காமராஜருக்கு, அப்போது அவரிடம் பேச முடியாத நிலை. அதன்பிறகு, நான்கு ஆண்டுகள் கழித்து 1923ம் ஆண்டு மதுரையில் அவரிடம் நேரடியாகப் பேசும் வாய்ப்புக் கிடைத்து சத்தியமூர்த்தியிடம் நெருங்குகிறார்.

சத்தியமூர்த்தியின் மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் திறமையான சிஷ்யராக, அவருக்கே பல விஷயங்களில் ஆலோசனைக் கூறும் நபராக உருவாகிறார் காமராஜர். இந்தக் காலக்கட்டத்தில் சத்தியமூர்த்தியின் அரசியல் குரு என்ற ஸ்தானத்தில் இருப்பவர் ராமநாதபுரம் ஸ்ரீனிவாச ஐயங்கார். இந்த ஸ்ரீனிவாச ஐயங்கார், காந்தியுடன் பல விஷயங்களில் முரண்பட்டு, இறுதியில் 1929ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்தே விலகுகிறார். காங்கிரஸில் ராஜாஜி அணிக்குப் போட்டி அணிதான் இந்த ஸ்ரீனிவாச ஐயங்கார் அணி. பின்னர், 1929ம் ஆண்டு, அவர் வெளியேறிய பிறகு, ராஜாஜி – சத்தியமூர்த்தி மோதல் என்றாகிறது. 1943ம் ஆண்டு சத்தியமூர்த்தியின் மறைவுக்குப் பிறகு, ராஜாஜி – காமராஜர் மோதலாகிறது. பாவம் ராஜாஜி, எத்தனை பேருடன்தான் விடாமல் ஓய்வின்றி மோதுவார்..!

ஸ்ரீனிவாச ஐயங்கார்

(இதே ஸ்ரீனிவாச ஐயங்கார், காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைய விரும்பி, அதற்காக காமராஜர் உதவியை நாடியதாகவும், ஆனால், ஐயங்காரின் காந்தி எதிர்ப்பு மனோபாவத்திற்காக, அந்த வேண்டுகோளை காமராஜர் ஏற்கவில்லை என்றும் அள்ளி விடும் பதிவுகளும் உண்டு. சத்தியமூர்த்தியே காந்தியின் கொள்கைகள் பலவற்றில் உடன்படாதவர்தானே! பிற்காலத்தில், காமராஜர் காந்தியை எதிர்த்ததும் பிரசித்தம்! அப்படியிருக்க, அந்த சத்தியமூர்த்திக்கே குருவாக இருந்த ஐயங்காரை தனியாக காந்தி எதிர்ப்பாளர் என்று கார்னர் செய்ய வேண்டிய அவசியமென்ன? இப்படியான சம்பவம் நிகழ்ந்தது உண்மையெனில், ஸ்ரீனிவாச ஐயங்காரை உள்ளே விடுவது, தனக்கான தேவையில்லாத தொந்தரவு என்று காமராஜர் நினைத்திருக்க வேண்டும். அதனால், அவரின் கோரிக்கையை நிராகரித்திருக்க வேண்டும் என்ற முடிவில்தான் லாஜிக் வாசனை அடிக்கிறது!

காமராஜரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி ஐயர், அரசியலில் சற்றே வெள்ளந்தி, அந்தளவிற்கு நேக்கு போக்கு தெரியாதவர், அன்றையப் பிரபலமான தமிழ்நாட்டு பிராமண காங்கிரஸ் தலைவர்களில் பொருளாதார வசதி குறைந்தவர், சிறந்த பார்லிமென்டேரியன் மற்றும் பேச்சாளர் என்று அறியப்பட்ட சத்தியமூர்த்தி, சனாதன தத்துவத்தின் பிரியராகவும் அறியப்பட்டவர். கடந்த 1928ம் ஆண்டு, சென்னை மாகாண கவுன்சிலில், தேவதாசி நடைமுறை ஒழிப்பு தொடர்பாக, சீர்திருத்தவாதி மற்றும் பெரியாரின் ஆதரவு பெற்ற முத்துலட்சுமி ரெட்டியுடன் இவர் மேற்கொண்ட வாதமே இதற்கு சாட்சி!

மேலும், கடந்த 1930ம் ஆண்டுகளில், ஹரிஜன இயக்கத்தில்(காந்தியாரைப் பின்பற்றி) ராஜாஜி ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகையில், அதில் ஆர்வம் காட்டாத சத்தியமூர்த்தி, நிலக்கிழார் தொடர்பான விஷயத்தில் கவனம் செலுத்துகிறார். (காந்தியாரின் இந்த முயற்சி, அம்பேத்கருக்கு எதிரான ஒரு அரசியல் என்று விமர்சிக்கப்படுவதுண்டு). தனது சனாதன நம்பிக்கையின்படி, தலித்துகள், சமூகத்தில் மேல்நிலைக்கு வந்துவிடக்கூடாது என்ற சித்தாந்தத்தில் நம்பிக்கை வைத்தவர் சத்தியமூர்த்தி என்று கூறப்படுகிறது. இந்த வகையில், ராஜாஜியை சற்றே மேலானவர் என்கின்றனர் சிலர். ஆண்டாள் கதாப்பாத்திரத்தை ‘ஒரு கற்பனை’ என்று ராஜாஜி சொன்னதையும் மறுக்க முடியாது.

சி.சுப்ரமணியம்

சத்தியமூர்த்தியின் சிலபல நிலைப்பாடுகள் இவ்வாறு இருக்க, அவரின் சீடர் காமராஜரோ, சமூகநீதி, கடவுள் நம்பிக்கை உள்ளிட்ட பல விஷயங்களில் திராவிட இயக்கச் சிந்தனைகளை உள்வாங்கியவர்! இருவருக்குமான முரண்பாடுகள் இப்படியாக இருந்தாலும், அரசியல் என்று வருகையில், இருவருக்கும் அற்புதமாக ஒத்துப்போனது!

காங்கிரசில், கீழ்மட்ட தொண்டர்களின் பெரிய ஆதரவு இல்லாத, அமைப்புரீதியாக கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது குறித்து பெரிய சாமர்த்தியம் இல்லாத சத்தியமூர்த்தியிடம், இவற்றிலெல்லாம் இயல்பிலேயே நிபுணத்துவம் பெற்ற காமராஜர் வந்து சேர்ந்ததானது, காங்கிரஸில் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்தது.

காந்திய சித்தாந்தத்தின்பால் பெரிய ஈர்ப்புக் கொண்ட காமராஜர், அந்த காந்தியுடன் அரசியல் கருத்துகளில், பல சமயங்களில் வேறுபட்ட சத்தியமூர்த்தியின் ஆத்மார்த்த சீடராக இருக்கிறார்..! அந்த காந்தியுடன் எப்போதும் பெரியளவில் நெருங்கியவராக இருந்த ராஜாஜியை எதிர்த்து அரசியல் செய்கிறார் காமராஜர்!

1937 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதையடுத்து, தனது குருநாதர் சத்தியமூர்த்தியை தனது அமைச்சரவையில் சேர்த்துக்கொள்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, பின்னர் ராஜாஜி ஏமாற்றியதை, காமராஜர் எப்போதும் மறப்பதற்கில்லை. அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு சத்தியமூர்த்தி, தனது சிஷ்யர் காமராஜருடன் இண‍ைந்து பெரியளவில் உழைத்தார் என்கின்றன பதிவுகள்.

முன்னாள் முதல்வர் பக்தவச்சலம்

கடந்த 1936ம் ஆண்டிற்கு பிறகு, சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவராக முயலும் சத்தியமூர்த்தியின் முயற்சிகள், திராவிட இயக்க செயல்பாடுகளின் விளைவால் தோல்வியில் முடிகின்றன. திராவிட இயக்கத்தால், பிராமணர் அல்லாதோருடைய எழுச்சியும் விழிப்புணர்வும் கிளப்பி விடப்பட்ட நிலையில், காங்கிரசுக்கு ஒரு பிராமணர் தலைவராக முடியாத நிலை ஏற்படுகிறது.

இடைப்பட்ட ஆண்டுகளில் பக்தவச்சலத்தின் நெருங்கிய உறவினர் முத்துரங்க முதலியார் மற்றும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரிடம் தோற்றுப் போகிறார் சத்தியமூர்த்தி.

இந்தச் சூழல்தான் காமராஜருக்கான ஒரு மிகப்பெரிய ‘ஜாக்பாட்’. பிராமணர் அல்லாதோர்தான் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக முடியும் என்ற நிலையில், சத்தியமூர்த்தி தனது சிஷ்யர் காமராஜரை 1940ம் ஆண்டு அப்பதவிக்கு நிறுத்த முடிவு செய்கிறார். தனது சீடரின் கீழ், கட்சியின் செயலாளராக பணியாற்றவும் சம்மதிக்கிறார் சத்தியமூர்த்தி. இப்பக்கம் காமராஜர் எனில், அப்பக்கம் சி.பி.சுப்பையா என்பவரை களமிறக்குகிறார் ராஜாஜி.

வெறும் 3 ஓட்டுகளை அதிகம் பெற்று கட்சித் தலைவர் அரியணையில் அமர்கிறார் காமராஜர். அதன்பிறகு, அவர் ஆடிய அரசியல் விளையாட்டுகள், அரசியல் மாணாக்கர்களுக்கான முக்கியமான பாடங்கள்!

 நாளை மீண்டும் படிக்கலாம்

 

– மதுரை மாயாண்டி