(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!)

சாதித்தவர் அவர் மட்டுமே!
கடந்த 1916ம் ஆண்டு, காங்கிரசில் பிராமணர் ஆதிக்கத்தை எதிர்கொள்ள முடியாமல், வெளியேறி தனியான அமைப்பைத் தொடங்குகிறார்கள் சர் பிட்டி தியாகராயச் செட்டியார், டாக்டர். நடேச முதலியார் மற்றும் டாக்டர். மாதவன் நாயர் போன்றோர். அவர்களோடு, ஆந்திரப் பகுதியின் பல பெரிய தனவந்தர்கள் மற்றும் கல்வியாளர்களும் அடக்கம். அதன் விளைவுதான் நீதிக்கட்சி!
அதன்பிறகான காலகட்டங்களில், காங்கிரஸில், பிராமணரல்லாத தலைவர்கள் என்ற முறையில், திரு.வி.க. ஆதிநாராயண செட்டி, ராமநாதன், டி.எஸ்.எஸ்.ராஜன், வரதராஜூலு நாயுடு, சுப்பராயன், முத்துரங்க முதலியார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, சர்தார் வேதரத்தினம், சி.பி.சுப்பையா, அண்ணாமலை பிள்ளை, அவிநாசிலிங்கம் செட்டியார், சி.சுப்ரமணியம் மற்றும் பக்தவச்சலம் போன்றோரெல்லாம் செயலாற்றுகிறார்கள். இவர்களும், காங்கிரசில் பிராமணர்கள் தலைமையேற்ற அணிகளில், பரஸ்பரம் பிரிந்திருந்து செயலாற்றுகிறார்கள். (பெரியார் வேறு என்பதால் அவரை இந்தப் பட்டியலிலிருந்து நாம் எடுத்துவிடலாம்).

சர் பிட்டி தியாகராயர், டாக்டர்.நடேசனார், டாக்டர்.மாதவன் நாயர்

இவர்களில், திரு.வி.க, வரதராஜூலு நாயுடு போன்றோரெல்லாம், காமராஜர், சாதாரண தொண்டராக காங்கிரஸில் வலம்வந்த காலத்திலேயே தமிழ்நாடு பிரிவுக்கு தலைவர்களாக இருந்தவர்கள். சுப்பராயன், கடந்த 1926ம் ஆண்டே (காமராஜருக்கு 28 ஆண்டுகள் முன்னதாக) சென்னை மாகாண முதல்வராகப் பதவியேற்றவர், முத்துரங்க முதலியார் மற்றும் ராமசாமி ரெட்டியார் போன்றோர், காமராஜருக்கு முன்னதாகவே கட்சித் தலைவர் ஆனவர்கள்.
மேலும், இவர்கள் அனைவரும், எப்படிப் பார்த்தாலும், காமராஜரைவிட சமூக அந்தஸ்து, படிப்பு மற்றும் குடும்பப் பின்னணியில் பெரிய ஆட்கள்! ஆனால், காங்கிரஸ் கட்சியில் இவர்களால் சாதிக்க முடியாததை சாதித்தார் காமராஜர்..! இவர்களைவிட மிகப்பெரிய ஆளுமையாக உயர்ந்தார் அவர்..!
கடந்த 1920கள் முதற்கொண்டே, காங்கிரஸில் வலுப்பெற்று வந்தாலும், 1931ம் ஆண்டு, சென்னை மாகாண காங்கிரஸ் துணைத் தலைவராக தனது குருநாதர் சத்தியமூர்த்தி இருந்தபோது, உள்கட்சி அமைப்பு தொடர்பாக தனது நிலையை பெரியளவில் வலுப்படுத்திக் கொள்கிறார் காமராஜர். சத்தியமூர்த்தி, அக்காலகட்டத்தில் துணைத்தலைவர் ஆவதற்கு, ராஜாஜியால் போடப்பட்ட முட்டுக்கட்டையை முறியடிக்க, சத்தியமூர்த்திக்கு சிறப்பான முறையில் உதவுகிறார் காமராஜர்.
காந்தியாருக்கு எதிரான அரசியலில்
காமராஜரின் அரசியல் குரு சத்தியமூர்த்தியும், அவருடைய குரு ஸ்ரீனிவாச ஐயங்காரும், பல விஷயங்களில் காந்தியுடன் முரண்பட்டவர்கள். குறிப்பாக, தேர்தலில் பங்கேற்று, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்பதில் ஆர்வமுள்ளவர்கள். சுயராஜ்ய கட்சியைத் தோற்றுவித்தவர்களுள் முக்கியமானவர் சத்தியமூர்த்தி ஐயர். ஒருகட்டத்தில், இந்த முரண்பாடு முற்றி, காங்கிரசை விட்டே, கடந்த 1929ம் ஆண்டு விலகுகிறார் ஸ்ரீனிவாச ஐயங்கார். இவர்களுக்கு எதிர் அரசியல் செய்த ராஜாஜிதான், சில சூழல்கள் தவிர்த்து, கடைசிவரை காந்தியாருக்கு நெருக்கமானவராய் இருந்தவர்.
சத்தியமூர்த்தி ஐயர்

ஆனால், காந்தியக் கொள்கைகளில் மானசீகப் பிடிப்பு உள்ளவராய் கருதப்படும் காமராஜர், தனது அரசியல் நடவடிக்கைகளில், காந்திக்கு எதிர் முகாமில் தொடர்ந்து பயணித்தும், ஒரு சமயத்தில், காந்தியையே எதிர்த்தும் அரசியல் செய்திருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
காமராஜர், ராஜாஜியின் சீடராக இருந்திருந்தால்..?
நாம் ஏற்கனவே கூறியதைப்போல், அன்றைய காங்கிரசின் புகழ்பெற்ற பிராமண முகங்களில், சத்தியமூர்த்தி, வசதி வாய்ப்புகள்(பொருளாதார & பத்திரிகை ஆதரவு) குறைந்தவர். அரசியல் சார்ந்த வாய்ப்புகளை எளிதில் விட்டுக்கொடுத்துவிடும் தன்மையுள்ளவர் என்றும் மதிப்பிடப்பட்டவர்.
திராவிட இயக்கப் பிரச்சாரத்தின் மூலம், தமிழக காங்கிரசில் பிராமணர்கள் தலைவராகவே முடியாத சூழல் வந்தபோது (1937ஆம் ஆண்டு ராஜாஜி தலைவரானதுதான் கடைசி பிராமணத் தலைமை), தனது சிஷ்யரை, கடந்த 1940ம் ஆண்டு அப்பதவிக்கு முன்னிறுத்துகிறார் சத்தியமூர்த்தி.

இதை ஏதோவொரு சூழலின் நெருக்கடி என்று வைத்துக்கொண்டாலும், அதற்கடுத்து நடந்ததுதான் சுவாரஸ்யமே! காமராஜர் காங்கிரஸ் தலைவராக இருக்கையில், அவரின் குருநாதர் சத்தியமூர்த்தி, சென்னை மாநகர மேயராக இருக்கிறார். அந்நேரத்தில், பிரிட்டிஷ் அரசு ஏற்பாடு செய்யும் எந்த நிகழ்விலும் காங்கிரஸ்காரர்கள் கலந்துகொள்ளக்கூடாது என்ற ஒரு விதி உட்கட்சியில் இருந்தது.
ஆனால், பிரிட்டிஷ் கவர்னர் சர் ஆர்தர் ஹோப் ஏற்பாடு செய்த பூண்டி நீர்த்தேக்க திறப்பு விழாவில், சத்தியமூர்த்தி கலந்துகொள்கிறார். இதனைக் கடுமையாக கண்டித்த காமராஜர், சத்தியமூர்த்தியிடம் விளக்கம் கேட்டு, மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்குகிறார். சத்தியமூர்த்தியும் உடனே இதை செய்துவிடுகிறார். இன்னொருமுறை, சத்தியமூர்த்திக்கு பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டாமென காமராஜர் ஆலோசனை வழங்க, அதற்கும் தலையசைக்கிறார் சத்தியமூர்த்தி.
சத்தியமூர்த்தியை நெருங்கிய தருணத்திலேயே, அவரின் இயல்புகளைப் பற்றி காமராஜர் ஓரளவு நன்றாகக் கணித்திருக்க வேண்டும். ஏனெனில், மனிதர்களைப் படித்துவிடும் வித்தையையும் அறிந்தவர் காமராஜர்! தேர்தல்களில் போட்டியிட்டு அதிகாரத்தில் பங்குபெற வேண்டுமென்ற சத்தியமூர்த்தியின் எண்ணம், காமராஜருக்குப் பிடித்திருக்க வேண்டும். மேலும், அன்றைய தமிழக காங்கிரஸ் என்பதே பிராமண ஆதிக்க அமைப்பு எனும்போது, சத்தியமூர்த்தியைப் போன்ற பிராமணரிடம் இருந்தால்தான், தனக்கான அரசியல் முன்னேற்றம் சாத்தியப்படும் என்பதையும் தனது மதிநுட்பத்தால் காமராஜர் யூகித்திருக்க வேண்டும்!
காமராஜர் கட்சித் தலைவர் பொறுப்பேற்ற(1940), மூன்று ஆண்டுகளிலேயே(1943) அவரின் குருநாதர் சத்தியமூர்த்தி மரணமடைந்து விடுகிறார். இதுவும், காமராஜருக்கான கதவுகள் அகலத் திறப்பதற்கு ஒரு காரணம் எனலாம்! ஒருவேளை சத்தியமூர்த்தி நீண்ட ஆயுள் வாழ்ந்திருந்தால், காமராஜரின் அரசியல் பயணம் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதைத் துல்லியமாக கணிப்பது கடினமே! சத்தியமூர்த்தி இன்னும் வாழ்ந்திருந்தால், தனது சீடரின் உதவியுடன், 1946ம் ஆண்டு முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கலாம்!
இப்போது நாம் ராஜாஜியை நினைத்துப் பார்ப்போம். அவரின் சீடராக இருந்திருந்தால், காமராஜர் இப்படியெல்லாம் ஆதிக்கம் செலுத்தியிருக்க முடியுமா? இல்லை, ராஜாஜிதான் அதை அனுமதித்திருப்பாரா?

ராஜாஜியைப் பொறுத்தவரை, அவரின் உளம் அறிந்தும், மனம் கோணாதும் செயல்பட்ட ம.பொ.சிவஞானத்தின் நிலை என்னவாயிற்று? ராஜாஜியின் விருப்பத்திற்கிணங்க, திராவிடத்தை அழிப்பதே தனது வேலை என்று கங்கணம் கட்டிக்கொண்டு சுழன்ற சிவஞானம், கடைசியில் ராஜாஜியால் நடுத்தெருவில்தான் விடப்பட்டார்.
1967 சட்டமன்ற தேர்தலில், திமுக சின்னத்தில், சென்னை தியாகராயநகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் சிவஞானம். அப்போதே இந்து அறநிலையத்துறை அமைச்சர் பதவிக்கு அண்ணாவிடம் அடிபோட, கடிவாளம் போட்டார் பெரியார். அதேசமயம், கலைஞர் கருணாநிதி காலத்தில் சட்டமேலவை துணைத் தலைவராகவும், எம்ஜிஆரின் காலத்தில் சட்டமேலவையின் தலைவராகவும் பதவிபெற்று, தனது அரசியல் வாழ்விற்கான அங்கீகாரமாக ம.பொ.சி. திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதானது. அதாவது, எந்த திராவிடத்தை ஒழிப்பதற்கு ம.பொ.சி. களமிறங்கினாரோ, அதே திராவிடக் கட்சிகளை அண்டிப் பிழைத்தார் பதவிகளுக்காக!
ராஜாஜியின் அணியிலிருந்து செயல்பட்ட வேறுபலரும் கூட, பின்னாளில் தமக்கென உகந்த வழிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.
முதல்நிலையில் இருந்தவர் ராஜாஜியே..!
தமிழக காங்கிரசைப் பொறுத்தவரை, ராஜாஜி – சத்தியமூர்த்தி மோதல் நிலவிய காலத்தில், பெரும்பாலான நேரங்களில் முதல்நிலை அந்தஸ்தில் இருந்தவர் ராஜாஜியே. காங்கிரஸ் அகில இந்திய தலைமையிடம், குறிப்பாக காந்தியிடம், ராஜாஜிக்கே செல்வாக்கு இருந்தது.

தனது சிஷ்யர் காமராஜரின் துணையுடனேயே, கடந்த 1930 முதற்கொண்டு, சத்தியமூர்த்தியால், ராஜாஜிக்கு குறிப்பிடத்தக்க வகையில் நெருக்கடி கொடுக்க முடிந்தது. அந்தவகையில், சத்தியமூர்த்தியின் கரங்களை பலவகையிலும் வலுப்படுத்தியவராக இருந்தார் காமராஜர்! சத்தியமூர்த்தியிடம் இருந்த அரசியல்ரீதியான விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இவற்றுக்கான காரணம் எனலாம்.
நாளை மீண்டும் படிக்கலாம்
 
– மதுரை மாயாண்டி