3ஆண்டுகளில் எத்தனை விவசாயிகள் தற்கொலை? கையை விரித்த மத்தியஅரசு

டில்லி:

டந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற கேள்விக்கு, தெரியா எனது மக்களவையில் மத்திய அமைச்சர் பதில் கூறினார். இது எதிர்க்கட்சி எம்.பி.க்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று 7வது நாளாக லோக்சபா கடும் அமளிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  விவசாய கடன்கள் தள்ளுபடி விவகாரம் தொடர்பாக  திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான தினேஷ் திரிவேதிக்கும்  மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

அப்போது, நாட்டில் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை குறித்த தகவல் மத்திய அரசுக்கு தெரியுமா? என திரிவேதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங், கடந்த 2015-ஆம் ஆண்டிற்கு பிறகு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட எண்ணிக்கை எவ்வளவு என மத்திய அரசுக்கு தெளிவாக தெரியாது என்று கூறினார்.

மத்திய அமைச்சரின் இந்த ஏனோதானோவென்ற பதில் எதிர்க்கட்சி எம்.பி.க்க ளிடையே கடும் கோபத்தை கிளறியது. நாட்டின் உயர்ந்த பொறுப்பில் உள்ள அமைச்சர் தெரியாது என்று பதில் சொல்வதா என கேள்வி எழுப்பினர்.

அதைத்தொடர்ந்து விளக்கம் அளித்த மத்தியஅமைச்சர்,  கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய அரசின் தகவல்படி நாட்டில் மொத்தம் 8,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

விவசாயிகள் தற்கொலை அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,030 பேரும், தெலங்கானாவில் 1,358 பேரும், கர்நாடகாவில் 1,197 பேரும் என்றும் தெரிவித்த அமைச்சர் ராதாமோகன்,  விவசாயத்திற்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால்  தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளே அதிகம் என்பதையும் ஒப்புக்கொண்டார்.

ஆனால், அதன்பிறகு விவசாயிகள் தற்கொலை குறித்த தகவல் இல்லை என்றே கைவிரித்தார்.