சென்னை:

மிழகத்தில் கடந்த மாதம் 18ந்தேதி மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு போதுமான அளவு தபால் வாக்குகள் வழங்கப்பட வில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  மக்களவை தேர்தலில் எத்தனை பேர் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்? அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை?  என்ற விவரங்களை வரும் 17ம் தேதி விவரங்களை தாக்கல் செய்ய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

தமிழகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 30 சதவீதம் பேருக்கு இன்னும் தபால் ஓட்டுகள் தரப்படவில்லை என்று ஆசிரியர் சங்கத்தினர் புகார் கூறியுள்ளனர். தலைமைச் செயலகத்தில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறுகையில், ”தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பணியில் சுமார் 4 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

சிலரது வீட்டு முகவரிக்கு தபால் ஓட்டு அனுப்பப்பட்டது. அதில் பலரது முகவரி தவறு என்று திருப்பி அனுப்பப்பட்டு விட்டன. தபால் ஓட்டு கிடைக்காதவர்கள், அங்குள்ள வட்டாட்சியரிடம் முறையிடுகின்றனர். ஆனால் எந்தப் பலனும் இல்லை. தற்போது தபால் ஓட்டுகளை தபாலில்தான் செலுத்த வேண்டும் என்று புதிய நிபந்தனையை தேர்தல் ஆணையம் கூறுகிறது. மேலும் ஓட்டு எண்ணும் 23-ந் தேதியன்றும் தபால் ஓட்டு போடுவதற்கு வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.